சபாஷ்..! பெண் பாதுகாப்பை உறுதி செய்ய.. வரிசையாக பல்வேறு திட்டங்களை அறிவித்த.. புதுவை ரங்கசாமி அரசு
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு புதுவை சட்டசபையில் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்துடன் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே புதுவையில் இருந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி - மார்ச் காலத்தில், புதுவையில் மாநில அரசு இல்லாததால் மத்திய அரசே நேரடியாக 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

சட்டசபைத் தேர்தல்
சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, புதுவை அரசை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நிலவிய குழப்பம் காரணமாக ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஆனது. இதனால் புதுச்சேரி பட்ஜெட்டும் தாமதமானது. புதிதாகப் பொறுப்பேற்றவுடன் புதுச்சேரிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகளில் என்ஆர் காங்கிரஸ் இறங்கியது. என்ஆர் காங்கிரஸ் அரசு - பாஜக கூட்டணியில் அமைந்த அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

புதுவை பட்ஜெட்
கடந்த சில வாரங்களுக்கு முன், புதுவை பட்ஜெட்டிற்காக சுமார் 10,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட வரைத் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையுடன் புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அன்று மாலை இந்த ஆண்டிற்கான புதுவை பட்ஜெட்டை நிதித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

பிங்க் பேருந்துகள்
அதைத் தொடர்ந்து தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் புதுவை சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் புதுவை சட்டசபையில் வெளியானது. நேற்று சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் வகையில் போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார். மேலும், ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி வசதிகளைக் கொண்ட பெண்கள் மட்டும் பயணிக்கும் புதிய பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார்.

அவசர எண் 112
அதேபோல உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் பெண்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய திட்டம் ஒன்று குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதுச்சேரியில் பணி முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், வெளியூரில் இருந்து வந்துள்ள பெண்கள் இரவு 10 மணி முதல் - காலை 6 மணி வரை தங்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லை எனக் கருதினால் 112 என்ற எண்ணில் போலீஸ் கட்டுப்பாட்டு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பெண் போலீஸ்
அப்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகப் பெண் காவலர் ஒருவர், காருடன் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பப்படுவார். மேலும், பாதுகாப்பான முறையில் தேவையான இடத்திற்குப் பெண்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்தார். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் இத்திட்டம் விரைவில் புதுவையில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications