கருப்பு கொம்பா.. பம்பரம் போல் சுற்றிச் சுழன்றானே.. உயிரிழந்த காளை நினைவாக விஜயபாஸ்கர் கண்ணீர் கவிதை!
புதுக்கோட்டை : ஜல்லிக்கட்டில் பங்கேற்று உயிரிழந்த தனது காளை நினைவாக விஜயாபாஸ்கர் எழுதிய கண்ணீர் கடிதம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. "தமிழ்நாட்டின் வாடிவாசல்களில் எல்லாம் பம்பரம் போல் சுற்றிச் சுழன்ற என் கருப்பு கொம்பன் இன்று அதிகாலை தன் பயணத்தை முடித்துக் கொண்டான். வாடிவாசல் உன் வருகைக்கு கண்கள் குவித்து காத்திருக்கிறது... நாங்கள் இதயம் கலங்கி தவிக்கின்றோம்... எம் கருப்பு கொம்பா... சென்று வா.." எனக் குறிப்பிட்டுள்ளார் விஜயபாஸ்கர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலை மோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தனது காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த விஜயபாஸ்கர், கருப்பு கொம்பன் காளை காயமடைந்து விழுந்ததைப் பார்த்ததும் பதறிப்போனார்.
மயங்கிக் கிடந்த காளைக்கு முதலுதவி செய்து பின்னர் உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் கருப்பு கொம்பன் மறைவு குறித்து விஜயபாஸ்கர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்தபோது, திருவப்பூர் ஜல்லிக்கட்டில் கருப்பு கொம்பன் காணாமல் போன செய்தி இடியாய் இறங்கியது. கிட்டத்தட்ட 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் இல்லம் வந்துசேர்ந்தான். இல்லம் வந்து சேர்ந்தவனை மீண்டும் இழந்து தவிப்போம் என ஒரு கணம்கூட எண்ணியதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலை நெஞ்சுரத்தோடு சந்தித்தவன் என் கருப்பு கொம்பன்.

கண் இமைக்கும் நொடிகளில் சீறிப்பாய்ந்து கால் பதித்த களத்தில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவன். அனல் பறக்கும் வேகத்தில் சுற்றிச் சுழன்றாலும், இல்லம் வந்து விட்டால் சுட்டிக் குழந்தையாய் மாறி விடுவான். மண் பேசும் பெருமைகளையும், எண்ணிலடங்கா பரிசுகளையும், அள்ளிக் குவித்த கருப்பு கொம்பன், சில தினங்களுக்கு முன்பு வடசேரிப்பட்டி வாடிவாசலில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டான்.
தமிழ்நாட்டின் வாடிவாசல்களில் எல்லாம் பம்பரம் போல் சுற்றிச் சுழன்ற என் கருப்பு கொம்பன் இன்று அதிகாலை தன் பயணத்தை முடித்துக் கொண்டான். வாடிவாசல் உன் வருகைக்கு கண்கள் குவித்து காத்திருக்கிறது... நாங்கள் இதயம் கலங்கி தவிக்கின்றோம்... எம் கருப்பு கொம்பா... சென்று வா... மீளாத்துயரில்... விஜயபாஸ்கர்" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கருப்பு கொம்பன் காளை நினைவாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications