வேங்கைவயல் விவகாரம்: 1 பெண், 2 ஆண்.. வெளியான அதிர்ச்சி தகவல்! குற்றவாளிகளை நெருங்கும் சிபிசிஐடி!
புதுக்கோட்டை : வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் இதுதொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதனை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

சிபிசிஐடி போலீசார் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை செய்து வந்த நிலையில், இதுவரை வேங்கை வயல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். 4 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத சம்பவம் பொது வெளியில் விவாதமாகியுள்ளது.
சிபிசிஐடி விசாரணை : இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் சிபிசிஐடி போலீசார் தங்களுடைய விசாரணையில் 11 பேரை சந்தேகப்படுவதாகவும், ஏற்கனவே மலம் கலந்த குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாதிரிகளை வைத்துக்கொண்டு, 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்து அந்த மாதிரிகளை குடிநீர் மாதிரிகளுடன் ஒப்பிட வேண்டும் எனவும், அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்றும் கோரினர்.
டிஎன்ஏ பரிசோதனை : மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் இன்னும் ஓரிரு நாட்களில் அந்த 11 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பார்கள் எனத் தெரிகிறது.
நீர் தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. டிஎன்ஏ சோதனை முடிந்தவுடன் அவை ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், தமிழ்நாட்டையே உலுக்கிய புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளை நெருங்கியுள்ளதால், விரைவில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications