குடிக்கும் நீரில்.. சிக்காது டிமிக்கி கொடுக்கும் குற்றவாளிகள்! வீடுவீடாக சல்லடை போடும் சிபிசிஐடி!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் இறையூர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

குடிநீரில் மலம்
மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்

சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

கோவிலில் வழிபாடு
மேலும் அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. இரட்டை குவளை முறை தொடர்பான உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சிறப்பு விசாரணை குழு
இந்த நிலையில் மலம் கலக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்களை போலீசார் தற்போது வரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்த நிலையில் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்கள் குறித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் ஆலோசனை
இறையூர் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு விசாரணையின் நிலை குறித்து புதுக்கோட்டையில் சிபிசிஐடி தனிப்படையினரிடம் சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய தில்லை நடராஜன், குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.நேற்று வரை 60 நபர்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று சிபிசிஐடி எஸ் பி தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.

வீடு வீடாக ஆலோசனை
டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகளோடு எஸ்பி தில்லை நடராஜன் ஆய்வு மேற்கொண்டு நான்கு தினங்களாக நடைபெற்று வரும் விசாரணையின் நிலைகுறித்து கேட்டறிந்ததோடு அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் குற்றவாளிகள் விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications