டீயில் வந்த அழுகிய வாடை.. டீக்கடை தண்ணீரை திறந்து பார்த்தால் அதிர்ச்சி! புதுக்கோட்டையில் பரபரப்பு!
புதுக்கோட்டை: டீக்கடையில் வைத்திருந்த தண்ணீரில் எலி கிடந்த நிலையில், அதனை கவனிக்காமல் அந்த தண்ணீரை பயன்படுத்தி டீ போட்டுக் கொடுத்துள்ளார் டீ மாஸ்டர். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை புது அரண்மனை வீதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன விற்பனை மையம் ஒன்றை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ரெனிஸ் (22), சண்முகேஸ்வரர் (27), கவின் (22), பிரவீன் (20), ஹரி (17), ஜெயம் ராஜ் (19), குணசீலன் (20) ஆகிய 7 இளைஞர்கள் செய்து வந்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் டீக்கடையில் டீ பார்சல் வாங்கி வந்து குடித்துள்ளனர். அப்போது டீ சுவையில் வித்தியாசம் இருந்ததை அறிந்த இளைஞர்கள், டீ கடைக்காரரிடம் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், எப்போதும் போல தான் டீ போட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, டீ மாஸ்டர் டீ போட பயன்படுத்திய தண்ணீர் பேரலில் பார்த்துள்ளனர். அந்த தண்ணீரில் அழுகிய நிலையில், எலி ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டீ குடித்த அந்த 7 இளைஞருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 7 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அந்த டீக்கடையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் பிரவீன் குமார் உடனடியாக ஆய்வு செய்து, கடைக்கு சீல் வைத்துள்ளார். டீ போட பயன்படுத்திய தண்ணீரில் எலி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications