திமுக மாவட்ட செயலாளர் காலில் விழுந்த அமைச்சர் ரகுபதி.. "இனிமே கூப்பிடாதீங்க”.. பரபர! என்ன நடந்தது?
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் காலில் அமைச்சர் ரகுபதி திடீரென விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக மற்றும் அதிமுகவினர் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அந்தவகையில், புதுக்கோட்டையிலும் பல்வேறு கட்சியினர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுக்கோட்டை கீழராஜ வீதி அருகே உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை 9 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சரியாக 9 மணிக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி வருகை தந்தார். ஆனால், 9.30 மணி வரையிலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் வருகை தரவில்லை. இதனால் நீண்ட நேரமாக காரிலேயே காத்திருந்தார் அமைச்சர் ரகுபதி.
10 மணிக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி வைப்பதற்காக சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் அண்ணா பிறந்தநாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கு கிளம்ப வேண்டி இருந்தது. இதனால், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏன் தாமதமாக நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்று கடிந்துகொண்டுள்ளார் அமைச்சர் ரகுபதி.

மணி 9.30-ஐ கடந்தும் வடக்கு மாவட்ட மா.செ செல்லபாண்டியன் வராத நிலையில், காரை விட்டு இறங்கி தனியாக மாலை அணிவித்து விட்டு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்குச் சென்று விடுவோம் என்ற யோசனைக்கு வந்தார் ரகுபதி. அப்போது தான் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக அண்ணா சிலை அருகே வருகை தந்தார்.
அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனை கையெடுத்து கும்பிட்டு இதுபோல் தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்காதீர்கள் என்று கூறி காலில் விழப் போனார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். அமைச்சர் - மாவட்ட செயலாளர் இடையே நடந்த நிகழ்வு திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications