பட்டா மாறுதல்.. கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் வரை.. புதிதாக சிக்கிய புதுக்கோட்டை விஏஓ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பட்டா மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர், தாசில்தார் என பலரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்பது, நிலத்தை அளக்க லஞ்சம் கேட்பது, மின் இணைப்பு லஞ்சம் கேட்பது, வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்பது பல அரசு சேவைகள் பெற லஞ்சம் கேட்பது இன்றும் பல அரசு அலுவலகங்களில் தொடர்கிறது.

எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்படுவது குறித்த செய்திகள் வந்தாலும், லஞ்சம் வாங்குவது மட்டும் நிற்கவே இல்லை. நிலங்களின் மதிப்பை பொறுத்து ஆயிரங்களில் லஞ்சம் கேட்பது தொடர்கிறது. சில பகுதிகளில் லட்சம் வரையிலும் லஞ்சம் கேட்பது நடக்கிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்படுகிறார்கள். அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவரது உறவினர்கள் நித்யா மற்றும்கவிதா. இவர்கள் பேருக்கும் 9 சென்ட் மற்றும் 7 சென்ட் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குரிய பட்டா மாறுதல் செய்வதற்காக ஆர்.பாலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சிவகுமார் சென்றுள்ளார். அங்கு புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி கிராமத்தை சேர்ந்த அப்பாதுரை (வயது 56) கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் பட்டா மாறுதல் குறித்து சிவக்குமார் அணுகி உள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை பட்டா மாறுதல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவக்குமார், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவு போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.50 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி சிவக்குமார் நேற்று பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரையிடம் ரூ.50 ஆயிரத்தை அவர் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று, அப்பாதுரையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 50000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி புதுக்கோட்டை அருகே கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications