புதுக்கோட்டை கலெக்டர் அருணாவின் அசத்தல்.. பெற்றோரை இழந்த 4 மகள்களுக்கு வீடு, கல்வி, அரசு உதவித்தொகை
புதுக்கோட்டை: பெற்றோரை இழந்த 4 மகள்களை அழைத்து வந்து அவர்களுக்கு உதவும்படி திமுக ஒன்றிய செயலாளர் வேண்டுகோள் விடுத்தபோது புதுகை கலெக்டர் கண் கலங்கி நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் தங்க வீடு, மாதம் தோறும் உதவித்தொகை, படிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா கிளிக்குடி ஊராட்சி வேப்பங்கனிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பெயர் சின்னப்பொண்ணு. இவர்கள் 2 பேருமே கூலித்தொழிலாளிகள்.

இவர்களது மகளும், மருமகனும் இறந்துவிட்டார்கள்.. எனவே இவர்களது பிள்ளைகள் சுபஸ்ரீ, சூர்யா, சந்தியா, ஸ்வேதா ஆகியோர், பாட்டி சின்னப்பொண்ணுவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இதில் 17 வயதான சுபஸ்ரீ, கூலி வேலைக்கு சென்று, அதில் வரும் வருமானத்தை வைத்துதான் தன்னுடைய 3 சகோதரிகளையும் படிக்க வைத்து வருகிறார்.
புதுக்கோட்டை கலெக்டர் அருணா
இந்நிலையில் இலுப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அருணா வந்திருந்தார்.. இதையறிந்த அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், தாய், தகப்பன் இருவரும் இல்லாமல் தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் 4 பெண் பிள்ளைகளையும், புதுக்கோட்டை கலெக்டர் அருணாவிடம் அழைத்து சென்றார்..
"இந்த 4 குழந்தைகளின் அப்பா 2 ஆண்டுகளுக்கு முன்பும், அம்மா 4 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்டனர். இதனால் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருவதோடு வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர், 17 வயதான சிறுமி வேலை செய்து மற்றவர்களை படிக்க வைக்கிறார்" என்று தெரிவித்தார்.
நீங்க படிச்சா போதும்
இதைக்கேட்டு கண் கலங்கிய கலெக்டர் அருணா, "இவர்கள் குடியிருக்க வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், குழந்தைகளை படிக்க வைக்கவும், அவர்களுக்கு மாத உதவித்தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும்.. பட்டா ரெடி பண்ணி வீடு ஒதுக்க சொல்கிறேன், மாதம் 2 ஆயிரம் என 4 பேருக்கு 8000 இனி கிடைக்கும்படி செய்கிறேன்" என்றார்..
பிறகு கலெக்டர் சுபஸ்ரீயிடம், இனிமேல் நீ வேலைக்கு போக வேண்டாம், உன்னை படிக்க வைக்கிறேன், படிக்கிறாயா?' என்று கேட்டார். அங்கிருந்த ஒன்றிய செயலாளரும், மற்றவர்களும், "படிம்மா" என்று சொல்லவும், சுபஸ்ரீயும் கட்டாயம் படிப்பதாக சொன்னார்..
உடனே கலெக்டர், "உன்னை பாலிடெக்னிக்கில் சேர்த்து விடுகிறேன், நல்லா படிக்கனும், படித்தால் மட்டுமே இந்த உதவிகள் எல்லாம் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். படிக்கவிட்டால் இதெல்லாம் கிடைக்காது" அன்பு கட்டளையிட்டு சொன்னார்..
சின்னப்பொண்ணு நெகிழ்ச்சி
கலெக்டரின் இந்த அதிரவை முடிவை கண்டு திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன் திக்குமுக்காடி போய்விட்டார்.. கலெக்டருக்கு நெகிழ்ந்து நன்றி சொன்னார்.. உடனே கலெக்டர், அந்த குழந்தைகளை அழைத்து வந்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்..
இந்த செயலால் கலெக்டர் அருணாவையும், திமுக ஒன்றிய செயலாளர் சந்திரனையும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டி கொண்டிருக்கிறார்கள்..
4 பேத்திகளையும் எப்படி கரை சேர்க்க போகிறேனோ? என்று கண் கலங்கி கொண்டிருந்த சின்னப்பொண்ணுவுக்கு நெகிழ்ச்சியில் நன்றி கண்ணீரை வடித்து கொண்டேயிருந்தார்..












Click it and Unblock the Notifications