அதிமுக ஒன்றியச் செயலாளர் விபத்தில் பலி! மாநாடு நடைபெறும் தருணத்தில் நிகழ்ந்த சோகம்! விஜயபாஸ்கர் ஷாக்
புதுக்கோட்டை: மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு முன்னேற்பாடு பணிகளை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அதிமுக ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் விபத்தில் பலியான துயரம் நிகழ்ந்துள்ளது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வலது கரம் போல் திகழ்ந்த சாம்பசிவம் அவருக்காக கடந்த தேர்தல்களில் இரவு பகலாக வேலை பார்த்தவர். அதிமுக மாநாடு பணிகளில் பிசியாக இருந்த விஜயபாஸ்கருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் அதிர்ந்து போயிருக்கிறார்.

சாம்பசிவத்தின் திடீர் உயிரிழப்பு சி.விஜயபாஸ்கரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் இந்த துயர நிகழ்வு பெரும் சோகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த தகவல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாநாடு முடிந்த பிறகு விபத்தில் உயிரிழந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் சாம்பசிவத்தின் மகன் கண் முன்னாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தான்.
சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் அதிவேகமாக வந்து மோதியது. அந்த கார் ஸ்பாட்டில் நிற்காமல் சென்றுவிட்டதால் சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த காரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications