மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலர்.. உடலை மயானம் வரை சுமந்து சென்ற புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணியில் இறந்த போலீஸ்காரர் உடலை மயானம் வரை பெண் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்ளிட்ட போலீசார் சுமந்து வந்தனர். போலீஸ்காரர் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தி 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே கல்லூா் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. பொதுவாக இந்த கோயில் திருவிழாவின் போது மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நேற்று முன்தினம் நடந்தது.

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தனர் மீமிசல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் (வயது 31) என்பவர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த சிலர் மஞ்சுவிரட்டு திடலுக்குள் சென்றனர். இதனைக் கண்ட போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக அங்கு நின்றிருந்த சரக்கு வேனில் இருந்து இறங்கி அவர்களை திடலில் இருந்து வெளியே செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென ஒரு காளை ஓடி வந்தது.கண் இமைக்கும் நேரத்தில் காவலர் நவநீதகிருஷ்ணன் நெஞ்சில் முட்டி தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் நவநீதகிருஷ்ணன் உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் நவநீதகிருஷ்ணன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அறந்தாங்கி எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் நவநீதகிருஷ்ணன் உடல் எல்.என்.புரத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது காவலர் உடலை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மயானம் வரை தோளில் சுமந்து சென்றார். அவருடன் அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பிரேம்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்ளிட்ட போலீசாரும் நவநீதகிருஷ்ணன் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்றனர். பின்னர் மயானத்தில் நவநீதகிருஷ்ணன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து நவநீதகிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications