திரும்ப நடக்கிறது வேங்கைவயல் கேஸ்.. குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் புதுக்கோட்டை கோர்ட் விடுவிக்குமா?
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.. வேங்கைவயல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 26ந் தேதி மனித கழிவு கலக்கப்பட்டிருந்தது.. இநத சம்பவமானது அதிர்ச்சியையும், பரபரப்பையும் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

அதிரவிட்ட வேங்கைவயல்
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்திய பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியாக ஆதாரங்கள், தடயங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்தனர்.. மேலும், கடந்த ஜனவரி 20-ந் தேதி, இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டிலும் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்த வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டது.
ஒரு சம்பந்தமும் இல்லை
இதையடுத்து, மார்ச் 12ம் தேதி குற்றவியல் நடுவர் மன்றத்தில் மேற்கண்ட 3 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு மார்ச் 20-க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, "எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், எங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று 3 பேருமே நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
மீண்டும் ஒத்திவைப்பு
இதற்கு பதிலளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. ஆனால், ஆதாரங்கள் வலுவாக உள்ளதால், அவர்களை விடுவிக்கக்கூடாது என்று சிபிஐடி தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு கடந்த 28ம் தேதியும் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..
அப்போது வழக்கில் தொடர்புடைய காவலர் முரளி ராஜா, சுதர்சன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால், இந்த வழக்கில் தொடர்புடைய முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அற்புதவாணன் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றம் விடுவிக்குமா
அதன்படியே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.. வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் உள்ளிட்ட 3 பேரையும், இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவிக்குமா? விடுவிக்காதா? என்பது இன்றைய விசாரணையில் தெரியவரும் என்பதால், இந்த வழக்கின் எதிர்பார்ப்பு மிகுதியாகவே கூடியிருக்கிறது.












Click it and Unblock the Notifications