முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா.. மாணவனை வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர்கள்.. விபரீத முடிவு! உயிர் போச்சே!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச்சொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையா, மாரிக்கண்ணு தம்பதியர். இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும் மணிமுத்து, மாதேஸ்வரன் என 2 மகன்களும் உள்ளனர். மாதேஸ்வரன், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாதேஸ்வரன் அதிகமாக முடி வளர்த்திருந்ததால், அவரது தலை முடியை வெட்ட சொல்லி தொடர்ந்து ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.

முடி வெட்ட ஆசிரியர்கள் வற்புறுத்தியதால் மாதேஸ்வரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாதேஸ்வரன் வழக்கம்போல் பள்ளிக்கு செல்லும்போது அவரது பெற்றோரிடம், "நான் தலைமுடி வெட்டவில்லை. என்னை ஆசிரியர்கள் திட்டுவார்கள். அவர்கள் உங்களிடம் பேசினால் பேசிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு தேர்வு எழுதச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவர் மாதேஸ்வரனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமுடியையும் தாடியையும் வெட்டிவிட்டு பிற்பகல் ஒரு மணிக்கு தேர்வு எழுத வருமாறு கூறி பள்ளியில் இருந்து அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவன் மாதேஸ்வரன் வீட்டுக்கு வரவில்லை. நேற்று இரவு வரை வராததால் மாணவனை காணவில்லை என குடும்பத்தினரும், உறவினர்களும் ஊர் முழுக்க தேடியுள்ளனர்.
நேற்று இரவு, பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் மாதேஸ்வரன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது மாணவரின் தற்கொலைக்கு அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் ஆசிரியர்கள் மீது கொலை வழக்கு பதிந்தால் மட்டுமே உடலை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி உறவினர்கள், மாணவனின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பின்னர், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாணவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவரின் சடலம் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு மாணவரின் உறவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளியை விட்டு ஆசிரியர்கள் வெளியே அனுப்பிய நிலையில், மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications