வேங்கை வயல் குடிநீர் தொட்டியை இடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு- புதிய தொட்டி கட்ட ரூ9 லட்சம் நிதி!
புதுக்கோட்டை: மலம் கலக்கப்பட்ட வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்ட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய தண்ணீர் தொட்டி கட்ட தமது எம்பி நிதியில் இருந்து ரூ9 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபா எம்பி புதுகை எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துகாடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்துவதற்கு தனியாக குடிநீர் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் மனித கழிவுகளை கலந்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்து தள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மலம் கலக்கப்பட்ட வேங்கைவயல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை தமிழ்நாடு அரசு இடிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபா எம்பி புதுகை எம்.எம்.அப்துல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய குடிநீர் தொட்டி கட்ட தமது எம்பி நிதியில் இருந்து ரூ9 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வேங்கை வயல் பிரச்சனை என்ன?
வேங்கை வயல் பிரச்சனை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் எனக்குக் கிடைத்தவுடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், பாதுகாப்பான குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடந்த 27-12-2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அலுவலர்கள் அக்குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்கள் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இந்த அவையிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், அந்த கிராமத்திலிருந்து இதுபோன்ற நோய்த் தொற்றுடைய நோயாளிகள் வருகை அதிகரித்த நிலையில், அவர்கள் பயன்படுத்தி வரும் குடிநீரைப் பரிசோதனை செய்திட மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதனடிப்படையில், வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்தபோது, மனிதக் கழிவுகள் கலந்துள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழு வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று 26-12-2022 முதல் இன்றுவரையில் அந்தக் கிராமத்திலேயே முகாமிட்டு நோய்த் தடுப்புப் பணிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அந்தக் கிராமத்தில் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், ஒரு மருத்துவ அலுவலர், 3 செவிலியர், 2 மருத்துவமனைப் பணியாளர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 10 பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்பின் உதவியோடு, அந்த கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசைத் தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டதோடு, அனைத்து குடிநீர் வழங்கு குழாய்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதன்மூலமாக நீரேற்றப்பட்டு, நீர்மாதிரி சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது குடிநீர் சுத்தமாக உள்ளது என அறிக்கை வரப்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரையில் 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications