விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றமே அரசின் பெரும் சாதனை! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதுக்கோட்டை: விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்தையே அரசின் சாதனையாக கருதுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என வாக்குவங்கி இல்லாதவர்களுக்கும் நன்மை செய்யும் அரசு தான் திமுக அரசு என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,397 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து ஏற்கனவே அங்கு முடிவுற்ற 140 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 50,575 பயனாளிகளுக்கு 370 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் பேச்சு
இதனிடையே அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்தையே அரசின் சாதனையாக பார்க்கிறேன் என்றார். வெறுமனே வாக்குவங்கியை மட்டும் குறிவைத்து எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை என்றும் திமுக அரசை பொறுத்தவரை நான்காம் தர அரசு என்றுக் கூறிக் கொள்வதில் பெருமை படுவதாகவும் கூறினார். நான்காம் தர நிலையில் உள்ள மக்களுக்காக அவர்களின் நல்வாழ்வுக்காக பாடுபடும் அரசு திமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார்.

மக்கள் நலத் திட்டங்கள்
ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் இந்த ஆட்சியால் உயர்ந்துள்ளது என்றும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மக்கள் அளிக்கக் கூடிய எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் அதில் இருக்கக் கூடிய நியாயத்தை புரிந்துகொண்டு திமுக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதிமொழியை முதல்வர் கூறினார்.

வெள்ளி செங்கோல்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினை கவுரவிக்கும் வகையில் அமைச்சர் மெய்யநாதன் வெள்ளி செங்கோல் ஒன்றை முதலமைச்சருக்கு பரிசாக கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்றிரவு சென்னை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications