சீமானுடன் நடிகர் விஜய் கூட்டணி.. உள்ளாட்சித் தேர்தலில் தவெக போட்டியா? புஸ்ஸி ஆனந்த் பரபர விளக்கம்!
புதுக்கோட்டை : நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவு செய்வார் என்று தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், மொத்தமாக 8.19 சதவிகித வாக்குகளை பெற்றது. இதன் மூலமாக நாம் தமிழர் கட்சி மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து கூறினார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியிருந்தார். தற்போது நடிகர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து கூறியதால், அடுத்த தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சி விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியினர் மத்தியில் விவாதங்கள் எழுந்தது.
தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அடுத்தக் கட்ட கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஜூன் 22ல் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூன் 18ல் சென்னை பனையூரில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக தகவல் வெளியாகியது.
மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, நலத்திட்ட உதவிகள், அடுத்தக் கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதனை திறந்து வைத்த தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே விஜய் தொடர்ந்து கூறும் அறிவுரை. சீமானுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவு செய்வார்.
அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்பதை விஜய் அறிவிப்பார். ஜூன் 18ல் தவெக சார்பாக எந்த ஆலோசனை கூட்டமும் இதுவரை எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், எந்த அவசரமும் தேவைப்படவில்லை. அடுத்ததாக நாமக்கல்லில் கட்சி அலுவலகம் திறக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications