வீட்டு மாடியை பசுமைக்காடாக மாற்றிய பெண் அரசு அதிகாரி – இவ்வளவு உணவுப் பொருட்களா?
புதுக்கோட்டை: இயற்கையால் உருவான மனிதன் நாளடைவில் இயற்கைக்கு ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறான். கலப்படமற்ற பொருட்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. காடுகள் அழிக்கப்பட்டு.. கான்கிரீட் காடுகள் பெருகி வரும் நிலையில், ஒரு பெண் அரசு அதிகாரி தன் வீட்டு மாடியை சோலைக் காடாக மாற்றி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. வயது 45. கிராம நிர்வாக அலுவலராக உள்ள இவர் தன் வீட்டை மாடித்தோட்டமாக மாற்றி, அதில் ஏராளமான காய்கறி, பழம் வகைகளை வளர்த்து வருகிறார்.

வீரமுத்து நம்மிடம் பேசுகையில், "புதுக்கோட்டை, மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் கல்லூரியிலும், மகன் பிளஸ் 1 வகுப்பும் படித்து வருகிறார்கள். என் கணவர் இறந்து 15 வருடங்களாகிவிட்டன. அம்மா, அப்பாவுடன் தான் இருந்து வருகிறேன்.

கொரோனா காலத்தில் உலகமே முடங்கியபோதுதான் எனக்கு வெளிச்சம் பாய்ந்தது. சந்தைக்கு செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே இரண்டு மண் தொட்டியில் தக்காளி செடி வளர்த்தேன். இரண்டு, நான்காக.. நான்கு பத்தாக.. பத்து.. இருபதாக மாறியது. தக்காளிக்கு பிறகு கீரை போட்டேன். அதுவும் நன்றாக வந்தது. அதன் பிறகு எங்கள் வீட்டுக்கு தேவையான பழம், பூ, மூலிகை ஆகியவற்றை 250 தொட்டிகளில் வைத்துள்ளேன்.

காலை எழுந்தவுடன் மாடித்தோட்டத்துக்கு சென்றுவிடுவேன். ஒரு மணி நேரம் அந்தப் பணிகளை மேற்கொள்வேன். பிள்ளைகளை அனுப்பிவிட்டு காலை 10 மணியளவில் நானும் அலுவலகம் வந்துவிடுவேன். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பிறகு மாலை 7 மணி முதல் இரவு 10மணி வரை பெரும்பாலும் மாடித்தோட்டம் சம்பந்தப்பட்ட பணியில் தான் இருப்பேன்.

அதன் பிறகு தான் மற்ற வேலைகளை பார்ப்பேன். எனக்கு இயற்கை மிகவும் பிடிக்கும். இப்போது எங்கள் மாடியில் சுமார் 300 செடிகள் உள்ளன. அதன் விதைகளை சேகரித்து, தினமும் 10 பேருக்கு தபால் மூலம் விதைகளை அனுப்பி வருகிறேன். நான் நாட்டு ரக காய்கறிகளை தான் பயன்படுத்துகிறேன். மரபு ரக விதைகளை தேடி தேடி சேகரித்து பயன்படுத்துகிறேன். இது என்னுடன் நின்றுவிடக்கூடாது என்பதற்காக பரவலாக்கம் செய்கிறேன்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோருக்கு விதைகள் அனுப்பியுள்ளேன். நீண்ட காலமாக முற்றிலும் இலவசமாக அனுப்பி வந்தேன். பொருளாதாரம் காரணமாக தற்போது தபாலுக்கு மட்டும் ரூ.10 கட்டணமாக வாங்குகிறேன். இப்போதும் விதை இலவசமாக தான் அனுப்புகிறேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் ஆர்வமாக விதைகள் கேட்கிறார்கள்.

ஸ்டார் ஃப்ரூட், வாட்டர் ஆப்பிள், தைவான் கிங் கொய்யா, பீட்ரூட் கொய்யா, சீனி கொய்யா, சப்போட்டா, அத்தி, டிராகன், சாத்துக்குடி உள்ளிட்ட 25 வகை பழச்செடிகளை வைத்துள்ளேன். செடி அவரை, செடி தம்பட்டை, செடி காராமணி, பாகற்காய், புடலங்காய், பீற்கங்காய் உள்ளிட்ட 12 வகை கொடிகள், 12 வகை மூலிகைகள், 8 வகையான செம்பருத்தி உள்பட ஏராளமான மலர் வகைகள் வைத்துள்ளேன்.

சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பக்கெட் தண்ணீரில் கடலை புண்ணாக்கு ஊற வைப்பேன். அதை வாரம் ஒருமுறை செடிகளுக்கு விடுவேன். மேலும் மீன் கழிவுகளில் நாட்டு சர்க்கரை கலந்து, 30 நாள்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு கொடுப்பேன். இதுதவிர மாட்டு சாணம் கொடுப்பேன். மாடியில் எல்லா செடிகளையும் வைக்க முடியாது. 5 அடிக்கு பயனளிக்க கூடிய செடிகள் மட்டும் வளர்க்கிறேன்.

என் மாடித்தோட்டத்துக்கு பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்கு வருகிறார்கள். பணி நிமித்தமான டென்ஷன் எவ்வளவு இருந்தாலும்.. வீட்டுக்கு சென்று மாடித்தோட்டத்தை பார்வையிட்டால் எல்லாம் பறந்துவிடும். நம் வீட்டுக்கு தேவையான பொருள்களை இயற்கையாக நம் வீட்டில் இருந்து கிடைப்பதில் பெரிய மனதிருப்தி கிடைக்கும்.
குழந்தைகளுக்கு இயற்கையான பொருட்களை கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. பணிச்சுமையால் இதை கவனிக்க முடியவில்லை. சில சமயம் செடி துவண்டுவிடும். அதனால் விட்டுவிடலாம் என்று கூட யோசித்துள்ளேன். இருப்பினும் என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்தடுத்து முன்னேறினேன்.

ஆரம்பத்தில் என்ன விதைகள் என்று கூட தெரியாது. இப்போது காய்கறி, கீரையில் உள்ள வகைகளை தெரிந்து கொண்டுள்ளேன். என் குழந்தைகளை வளர்ப்பதை போலதான் இந்த செடிகளையும் வளர்க்கிறேன். நேசிப்புடன் செய்யும்போது எந்த கடினமும் தெரியாது. இந்த பொருட்கள் எங்கள் குடும்பத்துக்கு நிறைவாக இருக்கும்.
இதை வணிகரீதியாக எடுத்து செல்லவில்லை. எங்கள் வீட்டுக்கு போக வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினருக்கு கொடுத்துவிடுவேன். இயற்கை பொருட்களையும், விதைகளையும் என்னுடன் நிற்காமல் பரவலாக்கம் செய்வதில் மன நிறைவு கிடைக்கிறது ."என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications