கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கும் பரவிய ஜிகா வைரஸ் பாதிப்பு- பொதுமக்கள் கடும் அச்சம்
புனே: கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் புனேவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சிக்குன்குனியாவை ஏற்படுத்தக் கூடிய கொசுக்களால்தான் ஜிகா வைரஸ் பரவுகிறது.
நாட்டில் கொரோனா அதிகம் பாதிப்புள்ள மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,000-த்தை தாண்டி பதிவாகி வருகிறது.
இதனால் கேரளாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் ஜிகா வைரஸ்
கேரளாவில் இதுவரை 60க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்புகளால் கேரளா மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா- தமிழக எல்லைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிராவின் புனே நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனேவில் ஜிகா பாதிப்பு
மகாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பு 6,000-க்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 200க்கும் அதிகமாக உள்ளன. புனே நகரில் 50 வயது பெண் ஒருவருக்குதான் ஜிகா வைரஸ் உறுதியானது. ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து அந்த பெண் குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் யாருக்கும் ஜிகா வைரஸ் பரவவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

சிக்கன்குனியா, ஜிகா
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெல்சார் கிராமத்தில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அந்த கிராம மக்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 3 பேருக்கு சிக்கன்குனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டன. அதில் ஒருவருக்குதான் ஜிகா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டது என்றனர். மேலும், ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்; போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் மத்திய குழு
இதனிடையே கொரோனா, ஜிகா வைரஸ்கள் பாதிப்பின் பிடியில் சிக்கி உள்ள கேரளாவுக்கு மத்திய குழு சென்று ஆய்வு நடத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா உள்ளிட்ட 10 மாநில அதிகாரிகளுடன் நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.

ஜிகா வைரஸ் என்பது என்ன?
ஜிகா வைரஸ் என்பது டெங்கு, சிக்கன்குனியா நோய்களை பரப்பக் கூடிய கொசுக்களால் உருவாகிறது. இது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதும் அல்ல. கேரளாவில் தமிழக எல்லைப் பகுதியான பரசல்லாவில்தான் கடந்த மாதம் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் பொதுவாக சுகாதாரப் பணியாளர்கள்தான் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
Recommended Video

ஓய்வுதான் முக்கியம்
தமிழகத்தில் 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் 2017-ல் குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுமோ அதேபோல்தான் ஜிகா வைரஸ் பாதிப்பாலும் உருவாகும் என்பது மருத்துவர்கள் கருத்து.மேலும் ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் அரிதாகவே ஏற்படுமாம். ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஓய்வுதான் மிக முக்கியமானது. தடுப்பூசிகள், சிகிச்சைகள் பெரும்பாலும் தேவைப்படுவது இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications