எடப்பாடி தான் எங்களின் எதிரி.. அதிமுகவை ஒருங்கிணைக்க இணைந்துள்ளோம்.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் பேட்டி!
ராமநாதபுரம்: எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒரே காரில் சென்று மாலை அணிவித்து கூட்டாக மரியாதை செலுத்தினர். ஏற்கனவே தென் மாவட்ட மக்கள் மத்தியில் அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றிருப்பது மற்றொரு சிக்கலாக உருவாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இல்லத்தில் மூவரும் சேர்ந்து சசிகலாவை சந்தித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், தேவர் நினைவிடத்தில் சபதம் எடுத்துக் கொண்டு நாங்கள் அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம். அதிமுகவில் பிரிந்த சக்திகள் ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையும் கூடி இருக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.
ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதே எங்கள் லட்சியம். எங்களின் ஒருங்கிணைப்பு பணியில் சசிகலாவும் இணைவார். போக்குவரத்து நெருக்கடி காரணங்களாம அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால்தான் மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து டிடிவி தினகரன் பேசுகையில், செங்கோட்டையன் கொங்கு நாட்டின் தங்கம். எங்களின் ஒருங்கிணைப்பு பணி தொடரும். துரோகத்தை வீழ்த்த ஜெயலலிதா ஆட்சியை ஒருங்கிணைப்போம். அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் செங்கோட்டையனும் எங்களுடன் கைகோர்த்துள்ளார். தேர்தலில் இணைந்து பணியாற்ற மூவரும் இணைந்துள்ளோம்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் எதிரி. அவரை வீழ்த்தும் வரை நாங்கள் ஓய மாட்டோம். மழை விவகாரத்தில் திமுக சிறப்பாக செயல்பட்டுள்ளதா என்பதை அறிய இன்னும் சில காலம் பொருத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி என்பதால் அனைத்தையும் விமர்சிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications