ரொம்ப வினோதமா இருக்கே- இலங்கை கடற்பரப்புக்குள் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் மலேரியா வருமாம்!
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக்குள் அனுமதித்தாலே மலேரியா பாதிப்பு வரும் என்பது ஈழத் தமிழ் மீனவர் நிலைப்பாடு.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதித்தால் ஈழத் தமிழர் மீனவர்களுக்கு மலேரியா தொற்று வந்துவிடும் என நூதனமான எதிர்ப்பு கிளப்பிவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே, தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சத்தீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி இலங்கை கடற்படை படுகொலை செய்கிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த துயரத்துக்கு தீர்வு காண முடியவில்லை. இந்த நிலையில்தான் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க உரிய கட்டணம் செலுத்தி லைசென்ஸ் வழங்குவது என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்தியா-இலங்கை அரசுகள் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது. இப்படியான ஒரு ஒப்பந்தம் மூலம் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்பது நம்பிக்கை.
ஆனால் இலங்கையின் மன்னார் மாவட்ட மீனவர் பிரதிநிதி ஆலம் என்பவர் இந்த லைசென்ஸ் வழங்கும் முறையை மிக கடுமையாக எதிர்த்துள்ளார். இவர் ஏற்கனவே, கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்பவும் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தியவர். சீனா ஆதரவு இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவுடன் மிக நெருக்கமாக செயல்படக் கூடியவர்.
தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து ஆலம் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கவே முடியாது. தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து இதுவரை எந்த ஒரு பணத்தையும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு பெறுத்தரவே இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து அரிசிதான் வந்துள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் நிச்சயம் ஈழத் தமிழ் மீனவர்களுக்குதான் பேரிழப்பு ஏற்படும். இதுவரையில் தமிழ்நாட்டு மீனவர்களால் ஏற்பட்ட பேரிழப்புக்கு என்ன நிவாரணம் கிடைத்தது? அப்படி எதுவுமே தராத போது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது யாருடைய நன்மைக்கானது?
இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் கடற்பரப்பு மட்டுமல்ல நிலப்பரப்பையும் இந்தியாவிடம் இலங்கை இழந்துவிடும். இலங்கை நாட்டில் தற்போது மலேரியா தொற்று பாதிப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் மலேரியா தொற்று பாதிப்பு வரும். ஆகையால் தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேச்சுவார்த்தையும் இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கவும் கூடாது. கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒரு பேச்சையுமே நாங்கள் விரும்பவும் இல்லை. இவ்வாறு ஆலம் கூறினார்.












Click it and Unblock the Notifications