“தெரியல.. வந்தா தான் தெரியும்” ஓபிஎஸ், செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு எடப்பாடி கொடுத்த ரியாக்ஷன்
ராமநாதபுரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "தெரியவில்லை, வந்தால் தான் தெரியும், வந்ததும் பதில் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கும் அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அண்மையில் குரல் எழுப்பி இருந்தார்.

இதற்கான பணியை அதிமுக தலைமை எடுக்கவில்லை என்றால் தானே அந்த பணியை தொடங்குவேன் எனவும் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் அனைத்து பொறுப்புகளையும் பறித்து அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார். இதனையடுத்து சிறிது காலம் அமைதி காத்து வந்தார் செங்கோட்டையன்.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்துள்ளார் செங்கோட்டையன். இன்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே பசும்பொன்னில் திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு உயர்ந்த இடம். தேவர் ஐயா என்பவர் அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கும், சாதியை சார்ந்தவர்களுக்கும் பொதுவானவர். தேசபக்தி மிக்கவர். தேசத்திற்காக பாடுபட்டவர். மக்களுக்காக பாடுபட்டவர். அப்படியிருக்கும் ஒருவருக்கு அனைவரும் புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது அறிவித்தார். சட்டமன்ற வளாகத்தில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்தை நிறுவியவர், ஜெயலலிதா. பசும்பொன் முத்துராமலிங்க 13 கிலோ தங்கக் கவசம் வழங்கியவர் ஜெயலலிதா. முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இணைந்து பசும்பொன் வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தெரியவில்லை.. வந்தால் தான் தெரியும்.. வந்தால் நான் பதில் சொல்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ்- டிடிவி தினகரன்- செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தெரியவில்லை, வந்தால் தான் தெரியும், வந்ததும் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications