மனு கொடுத்து 1 வருசம் ஆச்சு! எதுவும் நடக்கல! காங்கிரஸ் எம்.எல்.ஏ.கருமாணிக்கத்தை முற்றுகையிட்ட மக்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கத்தை முற்றுகையிட்ட எட்டுக்குடி கிராமமக்கள், மின் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக தாங்கள் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர் என கேள்விக்கணைகளை வீசினர்.
திருவாடானை தொகுதியை பொறுத்தவரை கரியமாணிக்கம், கே.ஆர்.ராமசாமி, கருமாணிக்கம், என ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் கடந்த 10 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கரு மாணிக்கத்தின் தாத்தா கரியமாணிக்கத்துக்கு தொகுதியில் ஒரு காலத்தில் தனிப்பெரும் செல்வாக்கு இருந்தது.

இப்படி பரம்பரை பரம்பரையாக திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வரும் இவர்களை எதிர்த்து இதுவரை யாரும் பெரியளவில் கேள்விகள் கேட்டதில்லை. அதெல்லாம் அந்தக்காலம் அப்பு என்கிற வகையில் இப்போது மறித்து நிறுத்தி கரு மாணிக்கம் எம்.எல்.ஏ.வை திகைக்க வைத்திருக்கிறார்கள் எட்டுக்குடி கிராமமக்கள்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் 2 மின் கம்பங்களை அகற்றக்கோரி ஓராண்டுக்கு முன்னர் உங்களிடம் மனு கொடுத்தோமே அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன என வினவினர். மேலும், தங்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பொருட்படுத்துவதே இல்லை என குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு கிடைக்க வழி செய்வதாக கருமாணிக்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதேபோல் மற்றொரு நிகழ்வு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியிலும் நடந்துள்ளது. அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோவை முற்றுகையிட்ட பள்ளப்பட்டி மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.
அவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார். இதையடுத்து பள்ளப்பட்டியை சேர்ந்த லோக்கல் திமுக பிரமுகர்கள் உள்ளூர்காரர்களை சமாளித்து அவரை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications