உதயநிதிக்கு ஒரு கோப்பை.. முதல்வருக்கு ஒரு கோப்பை.. எப்படி ஏமாத்திருக்காரு.. வினோத் பாபுவின் லீலைகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த வினோத் பாபு, மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாக, கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றினார். இதில் என்ன விஷேசம் என்றால் விளையாட்டு துறை அமைச்சரிடம் ஒரு கோப்பையையும், முதல்வரிடம் வேறு கோப்பையையும் காட்டி ஏமாற்றியதுதான்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு, சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என அந்த பகுதி மக்களை நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்து கொண்டாக கூறி இருக்கிறார். அத்துடன் அதில் இறுதி வரை முன்னேறி 'பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்களிடம் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தானை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்ததாக வினோத் பாபுவை அந்த ஊர் மக்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமைச்சரான அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தகவல் போயிருக்கிறது. இறுதியில் வினோத்பாபு அமைச்சரையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

வினோத்பாபு பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளதாக கருதிய அமைச்சர் ராஜகண்ணப்பன், முதலமைச்சரிடம் அவரை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தள்ளார். வினோத் பாபு, அமைச்சர் ராஜகண்ணப்பன் இருவரும் முதலமைச்சர் ஸ்டாலினை உலக கோப்பையுடன் சந்தித்த புகைப்படமும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் வினோத் பாபு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி கேப்டன் என்பதும், உலகக் கோப்பையை வென்று வந்ததாக சொல்வதெல்லாம் பொய் என சென்னை தலைமைச் செயலகத்திற்கு புகார் வந்துள்ளது. அப்படி எந்த போட்டியும் நடைபெறவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி என்று நம்பி, உதவிகளையும் செய்திருக்கிறார். ஆனால் அந்த உதவியை வினோத்பாபு தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்தியாவில் மேற்கு வங்காளம் ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய வினோத் பாபு, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போல் அதனை வீடியோ எடுத்து, அதனை மற்றவர்களுக்கு அனுப்பி மோசடி செய்யதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நடந்த சம்பவம் முற்றிலும் மோசடியானது என்று மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் கிரிக்கெட் அணியின் தமிழக துணை கேப்டன் முத்துசாமியும் உறுதி செய்தார். பாகிஸ்தானிற்கு விளையாட சென்றிருக்க துளி கூட வாய்ப்பில்லை எனறும அவர் கொண்டு வந்துள்ள உலக கோப்பை கப் போலியானது என்றும் உறுதிபடுத்தினார்.
இதில் என்ன விஷேசம் என்றால் விளையாட்டு துறை அமைச்சரிடம் ஒரு கோப்பையும், முதல்வரிடம் ஒரு கோப்பையை காட்டி ஏமாற்றியதுதான். முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு கோப்பையை காட்டி ஆசிர்வாதம் பெற்ற வினோத்பாபு, விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலினிடம் ஒரு வேறு கோப்பையை காட்டி வாழ்த்து பெற்றுள்ளார். இதனை குறிப்பிடும் நெட்டிசன்கள் பலர் வினோத்பாவுவின் செயலை கிண்டல் செய்து ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். கோப்பை எப்போதும் தனி நபரிடம் இருக்காது கிரிக்கெட் வாரியத்தின் கையில்தான் இருக்கும் என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். பாஸ்போர்ட் கூட இல்லாத ஒருத்தர், லண்டன் போய் விளையாட்டு போட்டியில் கோப்பை வென்றதாக கூறி ஏமாற்றி இருப்பதாக இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.
இதனிடையே வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் என்று கூறி முதலமைச்சர் உட்பட பலரையும் ஏமாற்றியதாக மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது 406, 420 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications