நீங்க பாடம் நடத்துங்க..பின்வாசல் வழியாக பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர்! ஷாக் ஆன ஆசிரியைகள்!
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திடீரென அரசு பள்ளியின் பின்வழியாக சென்று ஆய்வு நடத்தியதால் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லூரியில் வளர்ச்சி முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தினை துவங்கி வைப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு திடீரென சென்று அங்குள்ள ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வழக்கமாக அமைச்சர்கள், அதிகாரிகள் வந்தால் பள்ளியில் முன்வாசல் வழியாக வருவார்கள். இதனால் ஆசிரியர்கள் அலர்ட் ஆக வாய்ப்புண்டு என்பதால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர்களுடன் பள்ளியின் பின் வாசல் வழியாக திடீரென பள்ளிக்குள் விஜயம் செய்தார். பின்னர் அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் வகுப்பு நன்றாக போகிறதா என்று ஆசிரியையிடம் கேள்வி எழுப்பினார்.

திகைத்து நின்ற ஆசிரியை
ஒரு நிமிடம் திகைத்து நின்ற ஆசிரியை என்ன செய்வதென்றே தெரியாமல் நின்ற நிலையில் ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்க பாடம் நடத்துங்க! எனக் கூறி மாணவர்களோடு மாணவர்களாக தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடங்களை கவனித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கள் பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்த தலைமை ஆசிரியர் ஆசிரியை மற்றும் மாணவர்கள் அந்த வகுப்புக்கு திடீரென வந்து குவிந்தனர்.

ஸ்மார்ட் கிளாஸ்
அப்போது அவரவர் வகுப்புகளில் பாடம் நடத்துங்கள் நான் வந்து பார்க்கிறேன் எனச் சொல்லி அனைவரையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுப்பி வைத்தார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பாடம் நடத்தப்படுவது எப்படி என்று மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளிக்கு தேவையான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்

குழு புகைப்படம்
மேலும் மாணவர்களுடன் கல்வி கற்பது குறித்து விளக்கம் கேட்டறிந்து மாணவர்களுடைய உரையாற்றினார் மேலும் தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் அமர்வதற்கு மேஜை நாற்காலி தேவை என கோரிக்கை தொடர்ந்து உடனடியாக இந்த கோரிக்கையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷாவிடம் தெரிவித்து உடனடியாக மேஜை நாற்காலி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து ஆசிரியர்கள் அவருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications