முன்மாதிரி திட்டம்.. இதுவரை எத்தனை உயிர்களை காப்பாத்தி இருக்கோம் தெரியுமா? - அமைச்சர் சொன்ன தகவல்!
ராமநாதபுரம் : தமிழக முதல்வரின் முன்மாதிரி திட்டமான நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 576 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி
இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ராமநாதபுரம் கல்லூரியில் 150 மாணவர்கள் படிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தற்போது 100 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. அதனால் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இங்கு படித்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டிடம் கட்ட கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டிடம் கட்டப்படாததால் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 37 மாணவர்கள், 13 மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது.

3 ஆண்டு தாமதத்தால்
ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. 6 மாதத்தில் பணிகள் கட்டிடத்திற்கான முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜைகா நிறுவனம் 82 சதவீதம், அதாவது ரூ.1627.70 கோடி நிதி உதவியும், மத்திய அரசு 18 சதவீதம் நிதியும் தர உள்ளன. கட்டிட வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் விடப்பட்டு, இன்னும் 6 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் 3 ஆண்டு தாமதத்தால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

500 கோடி செலவில்
ராமநாதபுரத்தில் ரூ.500 கோடி செலவில் மருத்துவ கல்லூரி மற்றும் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பார்த்திபனூரில் ரூ.1 கோடி செலவில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். சுற்றுலா மையமான ராமேசுவரத்தில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

1 லட்சம் பேரின் உயிர்கள்
விபத்தில் சிக்குபவர்களை மீட்டு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. முதல்வரின் முன்மாதிரி திட்டமான இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் ஆட்சிக்கு வந்த இந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 576 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.94.69 கோடி செலவிட்டுள்ளது.

குட்கா கடத்தல்
குட்கா பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதித்தாலும், பக்கத்து மாநிலங்களிலிருந்து காய்கறி வண்டிகளில் குட்காவை கடத்தி வரும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications