ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. அதிமுக சார்பில்தான் தேவருக்கு வெள்ளி கவசம்.. இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் ஷாக்
ராமநாதபுரம்: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்தான் முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளிக்கவசத்தை வழங்கினேன் என பசும்பொன்னில் ஓபிஎஸ் தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஜெயந்தி விழாவும் 60 ஆவது குருபூஜை விழாவில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. தேவர் குருபூஜை விழாவில் அவருக்கு சாத்துவதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 14 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அதிமுக சார்பில் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த கவசத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அதிமுகவின் பொருளாளருக்கும் தேவர் திருக்கோயிலின் நிர்வாகி காந்தி மீனாள் அம்மையாரிடமும் வழங்கப்பட்டது. இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி கிளையின் பெட்டகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

குருபூஜை
ஆண்டுதோறும் தேவர் குருபூஜை விழாவின் போது அதிமுகவின் பொருளாளர் அந்த கவசத்தை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து அதை கோவில் பொறுப்பாளரிடம் கொடுப்பதும் விழா முடிந்ததும் இதே போன்ற நடைமுறை செயல்படுத்தப்பட்டு அந்த கவசம் வங்கி பெட்டகத்திற்கு செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

அதிமுகவில் பிளவு
ஆனால் அதிமுகவில் தற்போது பிளவு ஏற்பட்ட நிலையில் அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓபிஎஸ்ஸை நீக்கிய எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் சீனிவாசனை அந்த பொறுப்பில் அமர வைத்தார். பிறகு தேவர் குருபூஜைக்கு தங்க கவசம் கோரி அதிமுக பொருளாளர் என்ற பெயரில் திண்டுக்கல் சீனிவாசன் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் நான்தான் பொருளாளர், எனவே கவசம் என்னிடம்தான் கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ்ஸும் எதிர் கடிதம் எழுதினார்.

115 ஆவது தேவர் ஜெயந்தி விழா
இதனால் என்ன செய்வதென்றே தெரியாத வங்கி நிர்வாகம், அந்த கவசத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழாவும் தேவர் குருபூஜை விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக பசும்பொன்னிற்கு வருகை தந்த ஓபிஎஸ், 10.4 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவருக்கு வழங்கினார்.

வெள்ளி கவசம்
இதன் விலை ரூ 9.11 லட்சம் ஆகும். அது போல் வெள்ளியில் ஆன ருத்ராட்ச மாலையும் வழங்கப்பட்டது. பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக சார்பில்தான் வெள்ளிகவசத்தை கொடுத்தேன். நான்தானே ஒருங்கிணைப்பாளர். பெரியம்மா காந்தி மீனாளிடம் கொடுத்துவிட்டோம். அவர் எப்போது அணிவிப்பார் என தெரியவில்லை என்றார். தங்க கவசம் கைக்கு கிடைக்காததால் பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ்ஸோ தங்கம் இல்லாட்டி என்ன வெள்ளி கவசம் தருகிறோம் என கூறி அதையும் அதிமுக சார்பில் கொடுத்ததாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications