மகத்தான வரலாற்று அடையாளம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்! நினைவு சின்னமாக பராமரிக்க கோரிக்கை!
இராமநாதபுரம்: ராமேஸ்வரத்தையும் பாம்பனையும் இணைக்கும் வகையில் புதிதாக செங்குத்து தூக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட கடல் பாலமான ராமேஸ்வரம் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூறாண்டுகள் கடந்த அந்தப் பாலத்தை இனி வரும் காலங்களில் யாரும் பார்க்க முடியாது என்பது தான் அப்பகுதி மக்களின் வேதனையாக இருக்கிறது.
1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் கடல் பாலம் பாம்பன் தூக்கு பாலம். இது ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கிறது. 2024-ல் 110 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தப் பழைய பாலம், கடலின் நடுவில் கம்பீரமாக நின்று, பல புயல்களைக் கண்டுள்ளது.
சுமார் 2.3 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலம். இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர். பாக் ஜலசந்தி கடல் பகுதியையும், மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.

பாம்பன் பாலம்
சென்ற நூற்றாண்டின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாகும். இலங்கைக்கான வர்த்தக தொடர்புகளை எளிதாக்கும் விதத்தில் ராமநாதபுரம் மாவடத்திலுள்ள மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் விதத்தில் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயர்கள் கட்டியிருக்கின்றனர். மண்டபத்திலிருந்து, ராமேஸ்வரம் தீவிற்கும், பின்னர் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் இடையிலான பாலத்திற்கு ரூ.299 லட்சம் அந்த காலத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
பாம்பன் ரயில் பாலம்
திட்ட செலவு மிக அதிகம் என்று கூறி, அந்த திட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில், மண்டபம் - ராமேஸ்வரம் தீவு இடையிலான திட்டத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்ற அனுமதியளித்தது. அதன்பின்னர், பாம்பன் ரயில் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் 1902ம் ஆண்டு துவங்கியது. 1911ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தீவிரமானதுடன், விரைவாக இந்த ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
ஷெர்சர் ஸ்பேன்
மிகச் சிறப்பான திட்டமிடல் காரணமாக, குறுகிய காலத்தில் இந்த பொறியியல் அற்புதத்தை உருவாக்கினர். நூற்றாண்டை கடந்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சேவையாற்றி வரும் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த ஜெர்மனி நாட்டு பொறியாளர் ஷெர்சர் என்பவர்தான் தலைமை பொறியாளராக செயல்பட்டார். அவரது நினைவாக, தூக்கு பாலத்தை ஷெர்ஷர் ஸ்பேன் என்று அழைக்கின்றனர். மீட்டர்கேஜ் எனப்படும் குறுகிய ரயில் பாதையாக இருந்த பாம்பன் ரயில் பாலம், 2007ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
பாம்பனில் புதிய ரயில் பாலம்
அப்போது, பாலத்தின் உறுதித்தன்மையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து உள்ளது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து புதிய ரயில் பாலம் அமைக்க கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ரயில்பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி
இதைத் தொடர்ந்து 2019, ஆகஸ்ட்11ம் தேதி பூமிபூஜையுடன் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. தொடர்ந்து பாலத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் முதல் செங்குத்து கடல் லிப்ட் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில் 110 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற தற்போது டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்
கடலின் நடுவே பல புயல்களை கண்டு இன்றும் கம்பீரமாக நிற்கும் அந்த பாலத்தை பாதுகாப்பு கருதி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பாலத்தை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் எனவும் நினைவு சின்னமாக அந்த பாலம் கடலின் நடுவே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் ராமேஸ்வரம் பகுதி வாசிகள்.












Click it and Unblock the Notifications