ராமேஸ்வரம் புதிய பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் புதிதாகச் செங்குத்து தூக்கு பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தார்.. பிரதமரின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.. இலங்கையில் இருந்து மண்டபம் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்க பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிக்கு இடையே இருப்பது தான் பாம்பன் தூக்கு பாலம். இந்த பாலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. கடந்த 1911ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்தது. அனைத்து சோதனையும் முடிந்து 1914 முதல் அது மக்கள் பயன்பாட்டில் இருந்தது.

நூற்றாண்டைக் கடந்தும் இந்த தூக்கு பாலம் சிறப்பாகவே இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பழமையான தூக்கு பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ.550 கோடி மதிப்பில் கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, அனைத்து சோதனைகளும் முடிந்துள்ள நிலையில், இந்த பாலத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி இலங்கை நாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்த நிலையில், அவர் இன்று அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் பகுதிக்கு வந்தடைந்தார். பிறகு வேட்டி சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி, பாம்பன் புதிய தூக்கு பாலத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யத பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் உரையாற்றினார். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. மேலும், பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசர தேவை வாகனங்களைத் தவிர இதர வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை விமான நிலையத்திலும் மத்திய தொழில் படையின் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் பிரதமர் மோடி பாம்பன் பாலம் மட்டுமின்றி, ராணிப்பேட்டை 4 வழிச்சாலை, விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலை சாலை என பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications