50 கார்கள்! ஆளுயர ரோஜாப்பூ மாலைகள்! ராமநாதபுரம் எல்லை டூ தேர்போகி! ராஜீவ் காந்திக்கு கூடிய கூட்டம்!
ராமநாதபுரம்: திமுக மாணவர் அணித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக தனது சொந்த கிராமத்திற்கு சென்ற ராஜீவ்காந்தி தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்திக்காக கூடிய கூட்டத்தையும், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனும், திமுக மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கமும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
இதனிடையே முன்னதாக மதுரை விமான நிலையத்திலேயே ஆளுயர மாலைகள், பொன்னாடைகள் என ராஜீவ்காந்தியை வரவேற்று ஒரு கூட்டம் அமர்களப்படுத்திவிட்டது.

தடபுடல் வரவேற்பு
திமுக மாணவர் அணித் தலைவராக வழக்கறிஞர் ராஜீவ்காந்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான தேர்போகிக்கு நேற்று சென்ற அவருக்கு மாவட்ட எல்லையில் தொடங்கி தேர்போகி வரை தடபுடல் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க வழிநெடுகிலும் பொன்னாடைகள் போர்த்தி வரவேற்பு கொடுக்க உற்சாகமாக ஊருக்குள் சென்றார் ராஜீவ்காந்தி.

ராமநாதபுரம் மாவட்ட திமுக
ஆளுயர மாலைகளும், பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டதோடு வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. ராஜீவ்காந்திக்காக கூடிய கூட்டத்தையும், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனும், திமுக மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கமும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் 2 கோஷ்டிகள் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.

திமுக மாணவர் அணி
திமுகவில் இளைஞரணிக்கு அடுத்தபடியாக முக்கிய அணியாக திகழும் மாணவர் அணியில் மாநிலத் தலைவர் பதவி கிடைத்திருப்பதால் ராஜீவ்காந்தியுமே கடந்த ஒரு வாரமாக உற்சாகமாக காணப்படுகிறார். அமைச்சர்கள், கட்சியின் சீனியர்கள் என பலரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். நேற்று கூட ராமநாதபுரம் செல்லும் வழியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவை அவரது இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ராஜீவ்காந்தி பேச்சாற்றல்
நாம் தமிழர் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த ராஜீவ்காந்தி சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். இதையடுத்து திமுகவுக்காக சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்கள், பொதுக்கூட்டங்கள், பயிற்சி பாசறைகள் என பல தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இயங்கி ஆனித்தரமான வாதங்களை முன்வைத்து குரல் கொடுத்து வருகிறார். இவரது பேச்சாற்றலுக்கு கிடைத்த வெகுமதி தான் திமுக மாணவர் அணித் தலைவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.