டிஎன்பிஎஸ்சி அரசு வேலைக்காக தேர்வை எழுதிய ஒருவருக்காக.. மொத்த பள்ளிக்கும் விடுமுறை.. எங்கு தெரியுமா?
ராமநாதபுரம்: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு தேர்வு நடந்தது. காலியாக உள்ள 1033 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 21ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வினை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வர்கள் எழுதினார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எழுதினார்கள். ஒரு தேர்வு மையத்தில் ஒருவர் மட்டுமே பங்கேற்றார். ஒருவர் தேர்வு எழுதுவதற்காக மெட்ரிகுலேசன் பள்ளிக்கே விடுமுறை விடப்பட்டிருந்தது பேசுபொருள் ஆகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு அண்மையில் நடந்தது. ஆயிரத்து 33 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத தமிழ்நாடு முழுவதும் 92 ஆயிரத்து 495 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த தேர்வை எழுத 1,626 பேர் விண்ணப்பித்தனர்.

இவர்களுக்காக ராமநாதபுரத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவர்களுக்கான முதற்கட்ட தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரத்து 23 பேர் கலந்து கொண்டனர். 603 பேர் பங்கேற்கவில்லை. இதை தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற தேர்வை எழுத மொத்தம் 40 பேர் விண்ணப்பித்ததில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 20 பேர் பங்கேற்கவில்லை.
இதையடுத்து நடைபெற்ற எழுத்து தேர்வை எழுத ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். இவருக்காக ராமநாதபுரம் நகரில் செயல்படும் ஒரு மெட்ரிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வில் ஒருவர் மட்டும் பங்கேற்று எழுதினார். இதற்காக அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி பள்ளியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒருவர் எழுதிய போட்டித்தேர்வுக்காக பள்ளிக்கே விடுமுறை விடப்பட்டது பரபரப்பாகவும் பேசப்படுகிறது.
இது ஒருபுறம் எனில் குரூப் தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2025 நாளன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) (அறிவிக்கை எண்.08/2024 நாள் 20.06.2024 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2025 நாளன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள். நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது" இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications