காதலனுடன் கைதான ராமநாதபுரம் மண்டபம் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலா.. அதிரடியாக சஸ்பெண்ட்.. பரபரப்பு தகவல்
ராமநாதபுரம்: தலைமறைவு குற்றவாளியுடன் தங்கியிருந்த ராமநாதபுரம் மண்டபம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் டிஐஜி துரை உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் முதியவர் ராமர் . இவருடைய மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு நித்யா, ஸ்வேதா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதே ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (65), இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40), ராம்குமார் (35).

ராமர் குடும்பத்திற்கும், ராமசாமி குடும்பத்திற்கும் பணம் விவகாரத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21ம் தேதி நடந்தது.
இரவு 11.45 மணிக்கு முத்துமாரியம்மன் கோயிலில் ராமர் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அப்போது கோவிலில் சிம்ம வாகனம் தனிப்பட்ட முறையில் வைக்க வேண்டும் என ராமசாமி தரப்பினர் கேட்டிருக்கின்றனர். இதற்கு ராமரும், ஊரில் உள்ள சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராமசாமி குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.
மேலும் ராமசாமி குடும்பத்தினர், ராமரிடம், 'எங்களிடம் கடன் வாங்கிவிட்டு இன்னும் தராமல் இருக்கும் நீ எல்லாம் எங்களை எதிர்த்து பேசுகிறாயா?' என்று கூறி அவரை கடுமையாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த ராமர், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் ராமரின் மனைவி அன்னலட்சுமி புகார் செய்தார்.
இந்தப் புகார் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ராமரை அடித்து கொன்றதாக ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 2 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ராம்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
ராம்குமாரின் செல்போன் எண்ணை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்துள்ளார்கள். அவர் பெங்களூருவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து சென்றனர். பெங்களூருவில் இருந்து கோவாவிற்கு ராம்குமார் தப்ப இருந்த நிலையில், அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பெங்களூருவில் ராம்குமாருடன், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவும் (42) உடன் இருந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக ராம்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சத்யஷீலா ஆகிய இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ராம்குமாரும், சத்திய ஷீலாவும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பெண் இன்ஸ்பெக்டர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல்நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவான குற்றவாளியுடன் தங்கியருந்த காரணத்தால் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலாவை நேற்று சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் டிஐஜி துரை உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications