டீ குடிக்க போனது ஒரு குத்தமா? பஹ்ரைனில் தமிழக இளைஞர் பட்ட அவஸ்தை! ஆதரவாக நின்ற அன்னை தமிழ் மன்றம்!
ராமநாதபுரம்: பஹ்ரைனில் மீன் பிடித் தொழிலுக்காக சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்கு விபத்தில் சிக்கித் தவித்த நிலையில் ஆதரவு கரம் நீட்டி தாயகம் அனுப்பி வைத்துள்ளது அன்னைத் தமிழ் மன்றம்.
குடும்ப வறுமை சூழல் காரணமாக கடல் கடந்து சென்று வாழ்க்கையில் கரையேறி விடலாம் என எண்ணிச் சென்ற இளைஞருக்கு, பஹ்ரைனில் நிகழ்ந்ததோ துயரம் மட்டுமே.
இது தொடர்பான விவரம் வருமாறு;

மீன் பிடித் தொழில்
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். குடும்ப வறுமை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழிலுக்காக பஹ்ரைன் சென்றிருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக சாலையோரமிருந்த டீ கடைக்குச் சென்றவர் மீது, வாகனம் ஒன்று அசுர வேகத்தில் வந்து மோதியது.

2 கால்களும் முறிவு
இதில் இவரது இரண்டு கால்களும் முறிந்து சல்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது இரண்டு கால்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பாக்கியராஜ் மீது மோதிய வாகனம் உரிய காப்பீடு இல்லாமலும், வாகனத்தை ஓட்டிய நபர் உரிய உரிமம் இல்லாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பஹ்ரைன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

சட்ட உதவி
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாக்கியராஜ், இரண்டு கால்களும் முறிந்த நிலையில் தங்குவதற்கு சரியான இடமின்றி தவித்திருக்கிறார். இது குறித்து தகவலறிந்த பஹ்ரைனில் பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம் இவருக்கு தங்க இடம், உணவு வழங்கி பாதுகாத்து வந்தது. மேலும் இவருக்குத் தேவையான சட்டரீதியான உதவிகளை அன்னை தமிழ் மன்றத்தின் சட்ட ஆலோசனைக்குழு செய்து முடித்துள்ளது.

ஊருக்கு டிக்கெட்
மேலும், பாக்கியராஜின் முதலாளி நல் உள்ளம் படைத்தவராக இருந்ததால் அவரும் தன் பங்குக்கு பாக்கியராஜுக்கு உதவிகள் செய்திருக்கிறார். இதனிடையே நேற்று முன் தினம் பஹ்ரைனில் இருந்து பாக்கிராஜ் பத்திரமாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். இவருக்கான விமான பயணச்சீட்டை சுடலைமணி என்பவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

குவியும் பாராட்டு
ராமநாதபுரம் இளைஞர் பாக்கிராஜூக்கு பஹ்ரைனில் ஆதரவு கரம் நீட்டி அவரை உடனிருந்து கவனித்துக் கொண்ட அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் GK செந்தில், பொதுச்செயலாளர் டாக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் ஊருக்குச் செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்த சுடலைமணி ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications