முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம்: மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே இளைஞர் போலீஸ் அடித்து இளைஞர் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அவரது உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என அவரது தாய் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணிகண்டன் உடற்கூறு ஆய்வு போலீசார் முன்னிலையில் நடைபெறவும், அதை வீடியோ பதிவு செய்யவும் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

மாணவர் மர்மமாக உயிரிழந்தார்
ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். இவரது தாய் ராமலட்சுமி. டிசம்பர் 4ம் தேதி முதுகுளத்தூர் அடுத்த கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி முடிந்து அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன், போலீஸ் கையசைத்தும் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் விசாரணைக்கு பின் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் டிசம்பர் 5ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் பெற்றோர் அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கிடையே மணிகண்டனை பாம்பு கடித்தது என்றும் அதனால் அவர் இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இதை ஏற்க மறுத்த உறவினர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வாக்குறுதி தந்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மணிகண்டன் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் 3 நாட்கள் ஆகியும் வாங்கவில்லை. இதற்கிடையே ஆனைசேரியில் வசித்து வரும் மணிகண்டனின் தாய் ராமலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை
அந்த மனுவில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் துன்புறுத்தியதால் மணிகண்டன் உயிரிழந்து விட்டதாகவும், எனவே கொலை வழக்குப் பதிவு செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டன் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும், உடலை மறு உடற்கூராய்வு செய்து மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் தங்களது மனுவில் தெரிவித்துள்ளார்.
ராமலட்சுமியின் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் வந்தது.

ரீ போஸ்ட் மார்டம்
மனுவை படித்துப் பார்த்த நீதிபதி மணிகண்டன் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். மறு உடற்கூறாய்வு அறிக்கை வைத்தபின் மணிகண்டன் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் மேலதிக விசாரணை நடக்கும். மேலும் உடற்கூறு ஆய்வு போலீசார் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்றும் மணிகண்டன் உடற்கூறு ஆய்வை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மணிகண்டனின் மறுஉடற்கூறாய்வு முடிவுகள் வந்தபின் வழக்கில் அடுத்து கட்ட நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications