Rameswaram: ராமேஸ்வரத்தில் கொடூரம்.. பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாணவி கொலை.. காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும், அப்போது மாணவி விலகி செல்ல முயன்றதால், ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இன்று காலையில் பள்ளிக்கு செல்லும் அந்த மாணவியை இளைஞர் பின் தொடர்ந்து வரும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

12 ஆம் வகுப்பு மாணவி
ராமேஸ்வரம் அருகே இன்று காலையில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராமேஸ்வரம் சேராங்கோட்டை மீனவர் பகுதியில் வசித்து வருபவர் ஷாலினி. 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஷாலினியை அதே பகுதியை சேர்ந்த மீனவரான 21 வயது முனியராஜ் என்பவர் காதலித்துள்ளார்.
இதற்காக அடிக்கடி மாணவியை தொந்தரவு செய்து இருக்கிறார். தினமும் பள்ளி செல்லும் போது, பள்ளி சென்று வீடும் திரும்பும் போது என்னை காதலிக்க வேண்டும் என்று சொல்லி கூறியிருக்கிறார். கடந்த இரண்டு வாரமாக ஷாலினிக்கு இப்படி தொந்தரவு அளித்துள்ளார். இதனால் கடும் வேதனையடைந்த மாணவி இது பற்றி தன் அப்பா அம்மாவிடன் கூறியிருக்கிறார்.
பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி
அவர்களும் உடனே முனியராஜ் வீட்டுக்கு சென்று இதுபற்றி பேசி சமாதானம் செய்துள்ளனர். மாணவி பெற்றோரிடம் கூறியதால் முனியராஜ் ஆத்திரமடைந்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று காலையில் ஷாலினி எப்படியும் பள்ளிக்கு வருவார் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
வழக்கம்போல் இன்று மாணவி போயிட்டு வாரேம்மா என்று சொல்லியபடி வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். இதை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த முனியராஜ் சிறிது தூரத்தில் பின் தொடர ஆரம்பித்துள்ளார். ஏய் நில்லு.. என சொல்லியபடியே காதலிக்குமாறு கூறியதாகவும், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சரமாரியாக குத்தி கொலை
இதனால் பயந்து போன மாணவி அவரிடம் இருந்து விலக முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாணவி ஷாலினி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து முனியராஜை போலீசார் கைது செய்தனர். சம்பவத்துக்கு முன்பு இளைஞர் மாணவியை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் போராட்டம்
பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் முனியராஜுக்கு இங்கேயே தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அரசியல் கட்சிகள் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:- மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சமூக விரோதிகள் மட்டும் தான்
அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது.
ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.
இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications