"தீக்குளிப்பு போராட்டம்.." ராமேஸ்வரம் மீனவர்கள் பரபர அறிவிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்!
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதைக் கண்டித்து, இந்த பிரச்சினையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மீனவர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தித் தீக்குளித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்கும் போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாகக் கடிதங்களையும் எழுதி வருகிறார். இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
மீனவர்கள் போராட்டம்
இதற்கிடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை இந்தியா மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கச்சிமடம் பகுதியில் மூன்றாவது நாளாக மீனவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு சார்பில் யாரும் மீனவர்களைச் சந்தித்து உறுதியளிக்காததால் நாளையும் போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தீக்குளித்து போராட்டம் அறிவிப்பு
மேலும், படகுகளை விடுவிக்க இலங்கை கடற்படை அபராதம் அறிவித்துள்ள நிலையில், அந்த அபராதத்தைச் செலுத்த முடியாமல் பல மீனவர்கள் தவித்து வருகிறார்கள். அந்த மீனவர்களுக்காக நாளை திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications