கடல் தங்கம்.. ராமேஸ்வர மீனவர் வலையில் மாட்டிய அதிசயம்! கூறல் மீனை கண்டதுமே ராமநாதபுரம் ஆச்சரியம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கடலில், பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், கடல் பசு, டால்பின், திமிங்கலம், அரிதான கடற்பாசிகள், துடுப்பு மீன்கள் என எண்ணற்ற அரிய வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் காணப்படும் சில அரியவகை மீன்கள், ராமநாதபுர கடலில் மீண்டும் தென்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு ஆச்சரிய சம்பவம் ராமேஸ்வரத்தில் நடந்துள்ளது.
சமீபத்தில் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பியிருந்தார்கள். அப்போது மீனவர்களின் வலையில் டூம்ஸ் டே (கடைசி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீன் (Oar Fish) அதாவது துடுப்பு மீன் சிக்கியது.

இது 10 கிலோவுக்கு மேல் எடையும், 5 அடி நீளமும் காணப்பட்டது. கடற்பகுதியில் இப்படியொரு மீன் முதன்முறையாக பிடிபட்டதால், அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ராமேஸ்வரம் கடலில் அதிசயம்
இதற்கு டூம்ஸ் டே மீன் என்று அந்த காலத்தில் சொல்வார்களாம்.. ஆரஞ்சு நிற துடுப்பு, நீண்ட சதை பிடிப்பற்ற பட்டையான ரிப்பன் போல உடம்புடன் காணப்படும் இந்த மீன்கள், கரை ஒதுங்கினாலே பேரழிவு வரும் என்று அர்த்தமாம்.. ஆனால், அதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லிவிட்டார்கள் அதிகாரிகள்.
இந்நிலையில், பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கியிருக்கின்றனவாம்.. இதுதான் தற்போது ராமேஸ்வரத்தில் ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது.
கூறல் மீன்கள் ஆச்சரியம்
நேற்று முன்தினம் 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 600க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.. பிறகு மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பியபோது, சீலா, மாவுலா, பாறை, விளை உள்ளிட்ட பல வகையான மீன் மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 2 பெரிய கூறல் மீன்கள் சிக்கியிருந்தது பார்த்து மீனவர்கள் மலைத்து போனார்கள்.. அரிய வகையான கூறல் மீன்கள் 2 சிக்கிய நிலையில், 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனையாகி வியப்பை கூட்டியிருக்கிறது. இது மீனவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்து வருகிறது.
கடல் தங்கம்
கூறல் மீன்கள் குறித்து பாம்பன் மீனவர்கள் சொல்லும்போது, "இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும்.
இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவற்றை சுவையாகவும், கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்துகிறார்கள்..
இந்த மீனுக்கு கடல் தங்கம், கருந்திட்டு கத்தாளை என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.. பொதுவாக, கூறல் மீன்கள் ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் அதிகம் காணப்படும்.. இந்த மீன் இதய சிகிச்சையிக்கும் மருந்தாக பயன்படுகிறது.. கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது" என்கிறார்கள்..












Click it and Unblock the Notifications