ராமேஸ்வரம்... மோடி புனித நீராடிய அக்னி தீர்த்தம்.. 22 தீர்த்தங்களில் நீராடினால் இத்தனை பலன்களா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அக்னி தீர்த்த கடலிலும் 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுவார்கள். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அக்னி தீர்த்தக்கடலில் நீராடி விட்டு 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமியை தரிசனம் செய்துள்ளார். இந்த புனித தீர்த்தங்களின் சிறப்புகளை பார்க்கலாம்.

சீதையை கவர்ந்து சென்ற ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோ‌ஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோ‌ஷம், வீரஹத்தி தோ‌ஷம், சாயாஹத்தி தோ‌ஷம். சாயாஹத்தி தோ‌ஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோ‌ஷம் விலக, வேதாரண்யம் என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

Rameswaram Modi bathed in Agni Theertham What are the benefits of bathing in 22 holy Theerthas

விச்ரவஸ் என்ற மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோ‌ஷத்தை நீக்கிய இடம்தான் ராமேஸ்வரம். தன்னுடைய பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகுவதற்காக, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று ராமர் முடிவு செய்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை, காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் கூறினார்.

சிவலிங்கம் கொண்டு வர காசியை நோக்கிப் பறந்தார் அனுமன். ஆனால் அவர் வருவதற்கு சற்று தாமதமானது. குறிப்பிட்ட காலம் கடப்பதற்கு முன் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமபிரான். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட சீதாதேவி, கடற்கரை மணலிலேயே ஒரு அற்புதமான சிவலிங்கத்தை செய்து முடித்தார். அந்த லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்த ராமபிரான், அதற்குப் பூஜை செய்து வழிபட்டார். இந்த லிங்கமே ராமேஸ்வரம் திருத்தலத்தில் 'ராமலிங்கம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

காலம் தாழ்ந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், 'விஸ்வ லிங்கம்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு உள்ள விசாலாட்சி அம்மன் சன்னிதி அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய 'கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

Rameswaram Modi bathed in Agni Theertham What are the benefits of bathing in 22 holy Theerthas

வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தை வழிபடுகின்றனர் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாகும்.

ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. 'படிக லிங்க தரிசனம் கோடி பாப விமோசனம்’. இந்த படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

எத்தகைய கொடிய தோ‌ஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோ‌ஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

Rameswaram Modi bathed in Agni Theertham What are the benefits of bathing in 22 holy Theerthas

இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட சீதா தேவி தன் கற்பை நிரூபிக்க, அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமன். அப்போது சீதையின் கற்புத் திறன், அக்னியையே சுட்டதாகவும், அதை தாங்க முடியாத அக்னி பகவான், கடலில் மூழ்கி, தன் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இது தவிர மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரமஹத்தி தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யா மிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகிய 22 தீர்த்தங்களும் உள்ளன.

கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறார்.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோ‌ஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அஷ்டமி, அமாவாசை, மகாளய பட்ச புண்ணிய நாட்களில் பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தீர்த்தங்களில் புனித நீராடி சாமி தரிசனம் செய்துள்ளார். பொதுவாகவே கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் புனித நீராடி தீர்த்தங்களை சேகரித்து செல்வார்கள். பிரதமர் மோடியும் ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்தங்களை கொண்டு செல்ல உள்ளார்.

காசி யாத்திரை செய்பவர்கள் முதலில் இத்தல வழிபாடு செய்து, காசியில் விஸ்வநாதரையும், காசி காலபைரவரையும் வழிபட்டு, அங்கு கங்கையில் தீர்த்தம் எடுத்து வந்து, மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமிக்கு அந்த கங்கா அபிஷேகம் கொண்டு வழிபாடு செய்த பிறகே, காசி யாத்திரை முழுமை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+