பட்டை நாமத்துடன் வந்த இளைஞர்.. அழித்து விட்டு வருமாறு உத்தரவிட்ட போலீஸ்.. ராமநாதபுரத்தில் கலகல
ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளர் ஜெயபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ரமக்குடி: நெற்றியில் பெரிய பட்டை நாமத்தோடு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இளைஞரால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பரமக்குடியை சேர்ந்த ஜெ.பி. என்ற இரா.ஜெயபாண்டியன். இவருக்கு வயது 26. இவர் ஒரு சமூகசேவகர். குறிப்பாக அப்பகுதி மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு வாங்கி தருவது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான சர்ட்டிபிகேட்டுகளை வருவாய்த்துறை மூலம் பெற்று தருவதற்குரிய வழிமுறைகள் போன்றவற்றை செய்து வருகிறார்.
இவர் ஒரு பி.டெக். பட்டதாரி ஆவார். ஆனால் படித்து முடித்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. குடும்பத்தை கவனிக்கவும் வழி இல்லை.

வேட்பு மனு தாக்கல்
இதனால், மனம் நொந்துபோன ஜெயபாண்டியன், பேசாமல் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடலாம் என முடிவு செய்தார். அதற்காக அவரது நண்பர்கள் நான்கைந்து பேரை கூட்டிக் கொண்டு, வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வந்தார்.

வேலை இல்லை
அப்போது கையில் ஒரு அட்டையை ஏந்தி வந்தார். அதில், "இளைஞர்களே... இளைஞர்களே... உள்நாட்டிலும் வேலை இல்லை. வெளிநாட்டிலும் வேலை இல்லை. இளைஞர்களுக்கு வேலை தான் இல்லையென்றால் , அரசியல் களத்திலும் இடம் இல்லை. பட்டம் படித்த இளைஞர்களுக்கு பட்டை நாமம் மட்டுமே மிச்சம். அதனால் வந்து விட்டோம் தேர்தல் களத்திற்கு" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

பட்டை, நாமம்
அது மட்டுமில்லை.. அவரது நெற்றியில் பெரிய பட்டையும், நாமத்தையும் இட்டுக்கொண்டு வந்தார். அவருடன் வந்த நண்பர்களும் இப்படித்தான் பட்டை நாமத்தை போட்டு வந்திருந்தார்கள். ஆனால் பட்டை நாமத்தை பார்த்தும் அங்கிருந்த போலீசார் அவரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடவில்லை. வழியிலேயே தடுத்து நிறுத்தியதுடன், நெற்றியில் உள்ள நாமத்தை அழிக்குமாறு சொன்னார்கள்.

அனுமதி இல்லை
ஆனால் இளைஞர் நாமத்தை அழிக்க மறுத்தார். போலீசாரோ, பட்டை, நாமத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பட்டை, நாமத்தை அழித்துவிட்டு, இளைஞர் உள்ளே சென்று மனு தாக்கல் செய்தார்.

வேதனை பேச்சு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயபாண்டியன், "படிச்சு முடிச்சிட்டு வேலை கிடைக்காமல் எங்களை மாதிரி இளைஞர்கள் திண்டாடறோம். இந்த தொகுதி வாக்காளர்கள் என்னை சுயேட்சையாக நினைக்காமல், அவர்கள் வீட்டு மகனாக, படித்த இளைஞனாக, ஒரு சகோதரனாக பாவித்து ஓட்டு போட வேண்டும்" என்று வேதனையோடு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications