ஆனி அமாவாசை.. திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
ராமநாதபுரம்: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக, ராமேஸ்வரம் திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் நம்முடைய முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த தேதியில் திதி கொடுப்பது வழக்கம். அதேபோல, ஒவ்வொரு வருடமும் தை, ஆனி, ஆடி மாத அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு நீர் நிலைகளுக்கு சென்று திதி கொடுப்பது வழக்கம். இதனால், கர்மவினைகளுக்கு நாம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
ஆனி அமாவாசை: அந்தவகையில், ஆனி மாத அமாவாசையானது இன்று காலை 04.56 மணி துவங்கி, நாளை அதாவது ஜூலை 6ம் தேதி காலை 5 மணி வரை அமாவாசை திதி உள்ளது.

நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளதால் இது சர்வ அமாவாசையாக கருதப்படுகிறது. முக்கியமாக, சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள், தானங்கள் இரட்டிப்பு பலனை தரக்கூடியதாகும். தெய்வ வழிபாட்டுக்குரிய ஆனி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராமேஸ்வரம்: அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.. அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கரையில் தீர்த்தமாடி மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் தந்தனர்.. அப்போது பூஜைக்காக அழைத்து வந்த பசுவிற்கு பழங்கள், கீரை வகைகளை தந்து வழிபட்டனர்.
இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: இன்று பக்தர்கள் ஏராளமாக வருவதை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அத்துடன் நெரிசலின்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி தரிசனம் செய்தனர். நெரிசலை தடுக்க போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications