கச்சத்தீவை ஒரு போதும் விட்டுத்தர முடியாது.. இலங்கை திட்டவட்டம்
ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கொடுத்து விட்டது. இந்த தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்றும், இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்றும் தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. அதற்கு மாறாக, இலங்கைக்கு கச்சத்தீவை மத்திய அரசு 1970களில் கொடுத்துவிட்டது. அதனை தற்போது மீட்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் கச்சத்தீவை ஒரு போதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இருக்கிறது. இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று 1970களில் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் இதற்காக 1970களில் டெல்லி வந்திருந்தபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கச்சத்தீவினை இலங்கைக்கு தரும் ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்தில், கச்சத்தீவில் நடைபெறும் திருவிழாவுக்கு மக்கள் போவது கப்பல் போக்குவரத்து, மீன் பிடித்தல், இயற்கை வள ஆராய்ச்சி ஆகியவை குறித்து, திருப்தியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு முழு அளவில் இலங்கை ஆதரவு அளித்திருந்தது. இதனால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கப்பட்டது. இந்த சூழலை கச்சத்தீவினை இலங்கைக்கு தந்த இந்திரா காந்தி, இலங்கையுடனான உறவை பலப்படுத்த விரும்பியதாக இலங்கை தலைவர்களே அந்த காலத்தில் கூறியிருக்கிறார்கள்.
எனினும் கச்சத் தீவு பற்றிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்காக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுபற்றி ஐகோர்ட்டிலும் வழக்குத் தொடரவேண்டும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (அன்றைக்கு ஜனசங்க தலைவர்) கருத்து தெரிவித்திருந்தார். இதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும், கச்ச தீவை இலங்கைக்கு ஒப்படைத்ததை ஏற்க முடியாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். ஆனால் எதையும் அன்றைக்கு இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஏற்கவில்லை..
இந்நிலையில் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் கச்சத்தீவு பிரச்சனை பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் அடிக்கடி எழுப்பப்படுகிறது. இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை, கச்சத்தீவை ஒரு போதும் விட்டுத்தர முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் கூறுகையில், கச்சத்தீவை பிரச்சனையை தூதரக ரீதியாக தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது.இந்தியாவில் காங்கிரஸ், பாஜக அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு பிரச்சனையை எழுப்புகின்றன என்றார்.
முன்னதாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்பியது. முழு செலவையும் ஏற்பதாகவும் கூட இலங்கையிடம் பேசியிருந்தது. சுமார் 23 கிமீ தூரம் வரை இந்த கடல் பாலம் அமைக்கலாம் என திட்டமிட்டது. ஆனால் இந்த திட்டத்தை எந்த காலத்திலும் ஏற்க முடியாது என்று இலங்கை முன்பு அறிவித்திருந்தது. இந்தியா இலங்கை இடையே கடல்பாலம் அமைக்கப்பட்டால், இலங்கை இந்தியாவின் ஒரு அங்கம் போல் மாறிவிடும் என்று பயந்த இலங்கை, பாலம் அமைக்கும் திட்டம் வேண்டாம் என்று மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications