பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரே இடம்பெறவில்லை.. மக்கள் பாஜக பெயரை தவிர்க்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்!
ராமநாதபுரம்: பட்ஜெட்டில் எப்படி தமிழநாடு என்ற பெயரை மத்திய அரசு தவிர்த்ததோ, அதேபோல் தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இருந்து சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் 750க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் கபடி வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் அதிகளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ள மாவட்டம் ராமநாதபுரம் தான்.

தேசிய அளவிலான கபடி வீரர்கள் ராமநாதபுரத்தில் அதிகம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் சென்று கபடியில் சாதனை படைத்து வருகிறார்கள். வீரத்திற்கும், உடல் உறுதிக்கும் பெயர் போன கபடி விளையாட்டில் தலைசிறந்தவர்கள் நம் மாநிலத்தில் இருக்கும் போது புதிய உற்சாகத்தை அளிக்கிறது. ஒரு வீரருக்கு தலா ரூ.1,250 செலுத்தப்பட்டு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ஒரு கபடி வீரர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை எடுத்து கொள்ள முடியும். அதேபோல் நடப்பாண்டில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தமிழ்நாட்டில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், முதலமைச்சர் கோப்பையையும் நடத்தி இருக்கிறோம். அடுத்தடுத்து பல்வேறு விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
கபடியை தொடர்ந்து கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அடுத்தடுத்து மருத்துவக் காப்பீடு அளிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். அதற்கு நீங்களும் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் நாம் வெல்ல வேண்டும். வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்று நாம் நமது பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் இதே ராமநாதபுரம் தொகுதியில் இருந்து தான் பிரச்சாரத்தை தொடங்கினேன்.
40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம். அதேபோல் இன்று ராமநாதபுரத்தில் இருந்து நான் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன் என்று எடுத்து கொள்ளலாம். அதற்காக அனைவரும் களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். எப்படி பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதோ, அதேபோல் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications