என்னங்க எலியெல்லாம் ஓடுது..ருசி பார்ப்பவர்களை பதம் பார்த்துருமோ! ராமநாதபுரம் அம்மா உணவக அவல நிலை..!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டிடம் மிகவும் பழுதாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. துருப்பிடித்த கான்கிரீட் கம்பிகள் உள்ளே நுழையும் போதே பயமுறுத்துகிறது. மேலும் சமையல் கூடமும் எலிகள் விளையாடும் மைதானம் போல இருப்பதால் அச்சத்தில் உறைந்துள்ளனர் அம்மா உணவக பயனாளிகள்.
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். ஏழை எளிய மக்கள் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகின்ற நிலையில் குறைவான விலையில் சிறந்த சுவையான உணவு கிடைத்திடும் வகையில் அம்மா உணவகம் துவங்கப்பட்டது.

தினமும் காலை மற்றும் பகல் என உணவுகள் தயார் செய்யப்பட்டு குறைவான விலையில் வழங்கப்பட்டது. காலை உணவாக இட்லி, பொங்கல், இரண்டு வகையான சட்னி, சாம்பார் பிற்பகலில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டிடம் மிகவும் பழுதாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. துருப்பிடித்த கான்கிரீட் கம்பிகள் உள்ளே நுழையும் போதே பயமுறுத்துகிறது. இடமில்லை. கட்டடம் தான் பழுதாகிவிட்டது உணவாவது உருப்படியாக கிடைக்குமா என கேட்டால் காலை உணவாக வழங்கக்கூடிய இட்லி தயார் செய்ய பாத்திரங்கள் ஏதும் இல்லாத நிலையில் வெண்பொங்கல் மட்டுமே உள்ளது என்கின்றனர்.

மேலும் பழுதான கட்டிடத்தை சுற்றி கழிவு நீர் அம்மா உணவக சமையல் அறை வரை தேங்கி உள்ளதால் உள்ளே துர்நாற்றம் வீசுகிறது. கட்டிடம் இடிந்து விடும் நிலையில் உள்ளது உணவுக்கு தயார் செய்ய போதிய பாத்திரங்களும் இல்லை. இருப்பதையாவது சமைத்துக் கொடுங்கள் சாப்பிட்டுச் செல்லலாம் என வந்தால் சமைக்கும் இடம் முதல் சாப்பிடும் இடம் வரை எலிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அங்குமிங்கும் ஏராளமான எலிகள் ஓடி விளையாடுகின்றன.

சிறிது நேரம் விளையாடும் எலிகள் ஆட்களை கண்டவுடன் பூட்டிய அறை கதவின் கீழே உள்ள ஓட்டையில் நுழைகிறது. பூட்டியுள்ள அந்த அறையில் தான் பலசரக்கு சாமான்கள் வைத்திருக்கும் இடமென பணியாளர்கள் கூறுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் ருசியான உணவு கிடைத்திட வேண்டுமென உயரிய நோக்கத்தில் துவங்கப்பட்ட அம்மா உணவக கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையும், சுகாதாரமான முறையில் இருக்க வேண்டிய சமையில் அறை எலிகள் ஓடி விளையாடும் கூடாரமாகவும் சமைக்க தேவையான பாத்திரங்கள் இல்லாத அவல நிலையில் உள்ளது.

இதற்கெல்லாம் மேலே தினமும் சமைப்பதற்கு 4 பேர் வசிக்கக்கூடிய குடும்பத்திற்கு தேவையான அளவு காய்கறிகளை வழங்குவதாகவும் அதை வைத்து இரண்டு வேளையும் சமைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ தக்காளியில் ஒரு ஹோட்டல் நடத்த முடியுமா? நகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாதா? என்கின்றனர். ஆரம்ப நாட்களில் 500க்கும் மேற்பட்டோர் தினமும் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது 50 பேர் கூட வருவதில்லை என்கின்றனர். தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை மீண்டும் சிறப்பாக செயல்படவும், சுவையான உணவுகளை சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கிட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.













Click it and Unblock the Notifications