'ராசியப்பன் பாத்திரக்கடை'.. சிஎம் ஸ்டாலின் வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர்.. என்ன நடந்தது?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஓரு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாக, கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கண்ணப்பனை ஏமாற்றியுள்ளாராம். இதுபற்றி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு, சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என அந்த பகுதி மக்களை நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்து கொண்டாக கூறி இருக்கிறார். அத்துடன் அதில் இறுதி வரை முன்னேறி 'பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்களிடம் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தானை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்ததாக வினோத் பாபுவை ஊர் மக்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமைச்சரான அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தகவல் போயிருக்கிறது. இறுதியில் வினோத் பாவு அமைச்சரையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
வினோத்பாபு பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளதாக கருதி முதலமைச்சரிடம் அவரை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தள்ளார். வினோத் பாபு, அமைச்சர் ராஜகண்ணப்பன் இருவரும் முதலமைச்சரை உலக கோப்பையுடன் சந்தித்த புகைப்படமும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் வினோத் பாபு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி கேப்டன் என்பதும், உலகக் கோப்பையை வென்று வந்ததாக சொல்வதெல்லாம் பொய் என சென்னை தலைமைச் செயலகத்திற்கு புகார் வந்துள்ளது. அப்படி எந்த போட்டியும் நடைபெறவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி என்று நம்பி, உதவிகளையும் செய்திருக்கிறார். ஆனால் அந்த உதவியை வினோத்பாபு தவறாக பயன்படுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்காளம் ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய வினோத் பாபு, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போல் அதனை வீடியோ எடுத்து, அதனை மற்றவர்களுக்கு அனுப்பி மோசடி செய்யதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் கிரிக்கெட் அணியின் தமிழக துணை கேப்டன் முத்துசாமியும் உறுதி செய்துள்ளார். பாகிஸ்தானிற்கு விளையாட சென்றிருக்க துளி கூட வாய்ப்பில்லை எனறும் அவர் கொண்டு வந்துள்ள உலக கோப்பை கப் போலியானது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications