கூடை கூடையாய் ராமேஸ்வரத்தில் மீன்கள்.. கடலில் குதூகலம்! கரையில் கொஞ்ச நேரத்தில் மாறியது காட்சி.. ஏன்
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த 2 வாரமாக கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள், கடல் அமைதி அடைந்த பிறகு மறுபடியும் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. அதிக அளவில் மீன்களை பிடித்து கரைக்கு மகிழ்ச்சியாகவும் திரும்பினார்கள்.. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.. ஏன் என்னாச்சு தெரியுமா?
தமிழகம் முழுக்க இப்போது மழை கொட்டி வருகிறது.. இதில் புயல் அறிவிப்பும் வந்து போனது.. அந்தவகையில், கடந்த 14ம் தேதி முதலே வங்க கடலில் சூறாவளிக் காற்று வீசி ஆரம்பித்துவிட்டது.. கடலில் சீற்றங்கள் துவங்கிவிட்டன..

ராமேஸ்வரம் கடல்
இந்த நேரத்தில்தான், டிட்வா புயல் அறிவிப்பு வெளியாகி பீதியை தந்துவிட்டது.. இந்த கலக்கம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் யாருமே மீன்பிடிக்க போக கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது...
இதற்கு பிறகு, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியை கடந்து புயல், சென்னை நோக்கி நகர்ந்தது.. இதனால் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனவே, 2 வாரம் கழித்து, மீன் பிடிக்க செல்வது என மீனவர்கள் முடிவு செய்தார்கள்..
இதற்காக கடந்த 2ம் தேதி, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள்.. மொத்தம் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துவிட்டு நேற்றுதான் கரைக்கு திரும்பினார்கள்..
கூடை கூடையாய் மீன்கள்
இந்த முறை எதிர்பார்த்ததைவிட மீன் வரத்து அதிகமாக இருந்தது... ஒவ்வொரு படகிலும் குறைந்தபட்சம் 5 டன்களுக்கும் மேல் மீன்கள் கிடைத்தன. முக்கியமாக, முண்டக்கண்ணி பாறை, சாவாளை, ஓரா போன்ற மீன் வகைகளின் வரத்து ஒவ்வொரு படகிலும் இரண்டு டன்களுக்கும் அதிகமாக காணப்பட்டது.
சாவாளை மீன், ஓரா மீன்
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு இறங்கி, முதல் நாளிலேயே அதிக மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.. அதிக மீன்கள் கிடைத்ததால், அதிக லாபம் ஈட்டலாம் என்று கணக்கு போட்டனர்.. ஆனால், எதிர்பாராத விதமாக மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது.
இது குறித்து மீனவர்கள் சொல்லும்போது, "2 வாரம் கழித்து 5 டன்னுக்கும் மேல் மீன்கள் கிடைத்தன. ஆனால், சந்தையில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.. வழக்கமாக கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும் சாவாளை மீன், இப்போது வெறும் ரூ.40க்கும், ரூ. 80க்கு விற்பனையாகும் ஓரா மீன் ரூ.30-க்கும், ரூ.250 வரை விற்கப்படும் மாவுலா மீன் ரூ.150-க்கும் மட்டுமே விலை போகிறது. இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை..
வெறும் 20 ரூபாய்
இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு காரணம், கார்த்திகை மாத விரதமாக இருக்கலாம்.. கார்த்திகை மாதத்தில் பலரும் அசைவம் சாப்பிடுவதில்லை.. இதனால் மீன்களுக்கான தேவை குறைந்துவிட்டது..
பாம்பன் மற்றும் கேரளா மீன் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை என விலையைக் குறைத்து கேட்டதால், அதன்படியே கொடுக்க வேண்டியதாகிவிட்டது.. மொத்தத்தில் இந்த முறை அதிக மீன்கள் கிடைத்தும், விலை வீழ்ச்சியால் எங்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது என்று வருத்தத்துடன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications