சிலிர்த்த இஸ்லாமியர்கள்.. ராமநாதபுரம் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா.. வேலூர் இப்ராஹிம் பூரிப்பு
ராமநாதபுரம்: இந்தியாவின் பண்பாடு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் தலங்களாக தர்காக்கள் திகழ்வதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது.

ஏர்வாடி: இந்த தர்காவில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழாவானது, சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு திருவிழாவாக நடத்தப்படுவது வழக்கமாகும். அந்தவகையில், இந்த வருடத்துக்கான 850வது சந்தனக்கூடு திருவிழா, கடந்த 9ம் தேதி மவுலீது ஓதப்பட்டு துவங்கியது.
நேற்றைய தினம், ஏர்வாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்காவை அலங்கார ரதம் 3 முறை வலம் வந்தது. பிறகு சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு கொடி ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்: தர்ஹா மண்டத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தின் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டு கொடிமரத்தினை எடுத்து முக்கிய பகுதிகளில் இருந்து ஊர்வலமாக தர்ஹாவிற்கு வந்து மவுலீது ஓதப்பட்டு பச்சை நிறகொடியேற்றி சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை தொடங்கி, மறுநாள் ஜூன் 1ம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் யானை, குதிரை அணிவகுப்பு, சந்தனக்கூடு பவனி, சந்தனம் பூசும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்று, வருகிற ஜூன் 7ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.
வேலூர் இப்ராஹிம்: நேற்றைய தினம் நடந்த ஏர்வாடி தர்கா சந்தனகூடு விழா கொடியேற்றத்தில், பாஜக சார்பில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில பொதுச்செயலாளர் கல்வாரி தியாகராஜன் போன்றோர் பங்கேற்றனர்.
இதற்கு பிறகு வேலுார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஏர்வாடி தர்கா முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கக்கூடிய பாலமாக பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தலங்களாக தமிழகத்தில் உள்ள தர்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
காலத்தின் கட்டாயம்: பன்முகத்தன்மை கொண்ட பாரதத்தில் இதுபோன்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் தொடர வேண்டும். மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பங்கேற்பது காலத்தின் கட்டாயமாகும்.. முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் வாழும் தேசத்தில் அமைதி, பாதுகாப்பு, பஞ்சமில்லாத சிறப்பான வாழ்க்கைக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications