விஜய பிரபாகரன் இங்கியும் வந்துட்டாரா? இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி அஞ்சலி.. அதிமுக மரியாதை
ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில், இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமத்தில் 1924ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, வேதநாயகம் - ஞானசௌந்தரி தம்பதிக்கு பிறந்தார் இம்மானுவேல் சேகரன். இளம் வயதிலேயே சுதந்திர தாகம் இவருக்குள் பீறிட்டதால், விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

போராட்டம்: 1942ம் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், இம்மானுவேல் சேகரன் பங்கேற்று, 18ம் வயதிலேயே 3 மாதம் சிறைக்கும் சென்றார்.. பிறகு, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காக "ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பை உருவாக்கி திறன்பட நடத்தினார்.
இதில், அம்பேத்கர் பிறந்தநாளில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு நடத்துதல், இரட்டை குவளை ஒழிப்பு மாநாடு நடத்துதல், தீண்டாமைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துதல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என துடிப்புடன் செயலாற்றினார் இம்மானுவேல் சேகரன்.. இதனால், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பற்ற தலைவராக உயர்ந்தார்.
ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தினார் இம்மானுவேல் சேகரன். கிறித்துவ பள்ளிகளுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்த போது 'ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள்" என்று பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டப் போராட்டம் நடத்தினார்.
1957ல், காராமங்கம் கிராமத்தில் இறந்த வயதான பெண்மணியின் சடலத்தை மயானத்துக்கு பொதுப்பாதையில் எடுத்து செல்ல எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சனையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றதுடன், சடலத்தையும் நல்லடக்கம் செய்தார்.. இதுவே இம்மானுவேல் சேகரன் மீதான எதிர்ப்பை அதிகப்படுத்த காரணமாகிவிட்டது.
கொலை செய்த கும்பல்: இந்த நிகழ்வு கலவரமாக மாறி 42 பேர் கொல்லப்பட்டனர். இதனால் கலவரத்தை தடுக்க அனைத்து சமூக தலைவர்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட கூட்டத்தில், இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார். ஆனால், மறுநாளே செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனை, 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது.
12ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 13ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, 85 பேர் உயிரிழந்தனர். இந்த மண்ணுக்காக போராடி தன்னுடைய 33 வயதிலேயே உயிரை நீத்த இம்மானுவேல் சேகரன், தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய தலைவராகவே என்றென்றும் கருதப்பட்டு வருகிறார்..
குருபூஜை நிகழ்வு: அவரது நினைவாகவே, வருடந்தோறும் குரு பூஜை நிகழ்வும் நடைபெற்று வருகிறது... தமிழக அரசும் அவர் மறைந்த செப்டம்பர் 11ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது. அதன்படி, இமானுவேல் சேகரன் நினைவுதின குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி தமிழக அரசு சார்பில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அதேபோல, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இன்று மரியாதை செலுத்துகிறார்கள்.
இம்மானுவேல் சேகரனின் நினைநாளையொட்டி தமிழக அரசு சார்பில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.. திமுக சார்பில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்...
அதிமுக: இதையடுத்து, அதிமுக சார்பிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அதிமுக நிர்வாகிகள் மலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.. தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் நிர்வாநிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications