ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: பாஜக -அதிமுக கூட்டணி அமையலாம்... அமையாமலும் போகலாம் - மனம் திறக்கும் அன்வர் ராஜா

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக இடையே கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி தொடருவதாக பாஜக தலைவர் எல்.முருகன் கூறி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜாவின் கருத்து அனலை கிளப்பியுள்ளது.

What does Anwar Raja say about the BJP-AIADMK alliance in Tamil Nadu?

மேலும், 2-வது தலைநகரம், சசிகலா வருகை, அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: 2-வது தலைநகரம் கோரிக்கையை அமைச்சர்கள் இப்போது எழுப்புவதற்கான காரணம் என்ன?

பதில்: சென்னையில் மக்கள் நெரிசலும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதை உணர்ந்த புரட்சித் தலைவர் அவர்கள் 1984-ம் ஆண்டே திருச்சியை தலைநகரமாக்க விரும்பி அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கினார். அதற்குள் அவரது உடல்நிலை நலிவுற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியது. ஆகையால் 2-வது தலைநகரம் கோரிக்கையை பொறுத்தவரை இப்போது எழுகிறது அப்போது எழவில்லை என நாம் பார்க்கக்கூடாது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் சென்னையை நிர்வாக தலைநகரமாகவும், திருச்சியை சட்டமன்ற தலைநகரமாகவும், மதுரையை நீதிமன்ற தலைநகரமாகவும் கொண்டுவரலாம்.

கேள்வி: முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் ஏன் இத்தனை முரண்பாடுகள்?

பதில்: ஒரு முரண்பாடும் இல்லை. முதல்வர் வேட்பாளர் பிரச்சனை அதிமுகவுக்கு மட்டும் வந்துள்ளது போல் இப்போது பூதாகரமாக்கப்படுகின்றன. ஏற்கனவே திமுகவில் பல முறை இந்தப் பிரச்சனை வந்திருக்கிறது. அண்ணா இறந்தபோது, 1980 தேர்தல், 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பிரச்சனையை கருணாநிதியே எதிர்கொண்டுள்ளார். அதிமுகவில் அம்மா இருந்தது போல் இப்போது நடக்க சாத்தியமில்லை. அதனால் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து எங்கள் கட்சியின் தலைவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அதற்கான தருணம் இதுவல்ல.

கேள்வி: முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தால் கருத்து வேறுபாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறதே?

பதில்: பேச்சுவார்த்தை நடத்தி, கருத்து வேறுபாடுகளை எல்லாம் களைந்து, நிறை குறைகளை மனம் விட்டு பேசி, நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி அதற்கு பிறகு தான் அறிவிப்பார்கள். அப்படியிருக்கும் போது கருத்து வேறுபாடு எங்கிருந்து வரும். நான் தான் தெளிவாக கூறுகிறேனே, முன்கூட்டியே பேசி அதனடிப்படையில் முடிவெடுத்து தலைமை அறிவிக்கும் போது சலசலப்பிற்கே இடமிருக்காது.

கேள்வி: அதிமுக -பாஜக கூட்டணி பற்றிய தங்கள் கருத்து என்ன?

பதில்: அதாவது அரசியலை பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் மற்றொரு அரசியல் கட்சியோடு கொள்கை ரீதியாக கூட்டணி வைத்துக்கொள்ளாது. அந்தந்த தேர்தலுக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும் தேர்தல் முடிந்துவிட்டால் தோழமைக் கட்சிகளாக தொடரலாமே தவிர கூட்டணிக் கட்சிகள் என கருதுவது தவறு. நீங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தை எடுத்து பார்த்தால் ஒன்று புரியும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, ஒரு பொதுத்தேர்தலில் போடுகிற கூட்டணி அந்த பொதுத்தேர்தலோடு முடிந்துவிட்டது. நாங்கள் ஒன்றும் மத்திய அரசில் பங்கு வகிக்கவில்லை. இதனால் கொள்கை ரீதியாகவோ, கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலோ பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை. ஒரு வேளை இனி மேல் கூட்டணி அமைந்தாலும் அமையலாம் அமையாமலும் போகலாம். இப்போது இது பற்றி என்னால் கூற இயலாது, கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சித் தலைமை முடிவெடுக்கும்.

கேள்வி: சசிகலா விடுதலைக்கு பிறகு அரசியலிலும், கட்சியிலும் தாக்கம் ஏற்படுமா, நீங்கள் நினைப்பது என்ன?

பதில்: அதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சசிகலா அவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளை பொறுத்து தான் அதன் தாக்கம் இருக்கக்கூடும். அரசியல் வேண்டாம் அமைதியாக இருப்போம் என அவர் முடிவெடுத்தால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், கட்சிக்குள் வரவேண்டும் என நினைத்தால் அது ஒரு தாக்கத்தை உண்டாக்கும், அதிமுக பிளவுபட்டு இருக்கக்கூடாது அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என முடிவெடுத்தால் அது ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் சசிகலா அவர்கள் வெளியே வந்த பிறகு அவர் எடுக்கக்கூடிய முடிவை பொறுத்து அரசியல் நகர்வுகள் அமையும்.

English summary
What does Anwar Raja say about the BJP-AIADMK alliance?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X