தர்மயுத்தம்-தாமரை..தலைகாப்பாரா ’தர்மர்’? முக்கிய ப்ளான் போடும் ஓ.பன்னீர்செல்வம்! ஓஹோ இதுதான் கணக்கா?
ராமநாதபுரம்: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டது, சட்டப் போராட்டம் தோல்வி என அதிமுகவில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனியை விட்டுவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிட காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்த போது பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன..
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதிக்கம் காரணமாக ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய நபராக இருந்து ஓபிஎஸ் பின்னர் அதே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். முன்னதாக சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது எல்லாம் அனைவரும் அறிந்ததே..

கீழ் கோர்ட்டில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரால் அதிமுகவில் மீண்டும் நுழைய முடியவில்லை. ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்: இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த அவர் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அது மட்டும் அவ்வளவு எளிதாக இருந்து விடவில்லை. பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே ஐந்து வேட்பாளர்கள் அவருக்கு எதிராக போட்டியிட்டது சிக்கலை ஏற்படுத்தியது. சொந்த ஊரான தேனியை விட்டுவிட்டு இராமநாதபுரத்தில் போட்டியிட காரணம் என்ன? அவருக்கு இராமநாதபுரத்தை டிக் செய்து கொடுத்தது யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முளைத்தன. இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்திருக்கும் நிலையில் அதற்கெல்லாம் விடை கிடைத்திருக்கிறது.
என்ன காரணம்?: ராமநாதபுரம் தொகுதியை ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன என விசாரித்த போது பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன. முழுக்க முழுக்க சமுதாய வாக்குகளை நம்பியே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்த அவர் தரப்பு ஆதரவாளர்கள். தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பல விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி மீது முக்குலத்தோர் சமுதாயம் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் நீங்கள் நேரடியாக போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என அவரிடம் சொல்லியுள்ளனர் இராமநாதபுரம் ரத்தத்தின் ரத்தங்கள்.
பிரதமர் மோடி: மேலும் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள இராமநாதபுரம் அதிமுகவினரும், பாஜகவினரும் ஓ.பன்னீர்செல்வத்தை உசுப்பி விட அதன் காரணமாகவே அவர் ராமநாதபுரத்தில் களம் இறங்கினார் என்கின்றனர். மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - திமுக தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரே ஒன்றரை லட்சம் வாக்குகள் பெறும் போது உங்களால் முடியாதா என கூறியதைக் கேட்டு ஓபிஎஸ் களம் இறங்கி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே பலமுறை பிரதமர் நரேந்திர மோடி இராமேஸ்வரம் வந்து சென்ற நிலையில் அவர் போட்டியிடலாம் என கூறப்பட்டது.
ஆதரவு வட்டம்: இது உண்மை இல்லை என்கின்றனர் ராமநாதபுரம் பாஜகவினர். ஊடகங்கள் மூலம் இந்த விவகாரம் பெரிது படுத்தப்பட்டதே தவிர பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் திட்டமே இல்லை எனவும் போட்டியிட விரும்பிய தொகுதி என சொல்லி வேறு யாரையாவது களம் இறக்க வசதியாக இருக்கும் என்பதால் இது தமிழக பாஜகவின் திட்டமிட்ட செயல் என்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் ராமநாதபுரத்தில் அவருக்கான ஆதரவு வட்டம் அதிகமாக இருந்தது.
எம்பி தர்மர்: காரணம் அந்த பகுதியைச் சேர்ந்த தர்மரை தனது செல்வாக்கின் மூலம் மாநிலங்களவை எம்பி ஆக்கி காட்டினார் ஓபிஎஸ். இதனால் அதிமுகவை தவிர்த்து செல்வாக்கு ராமநாதபுரத்தில் இருப்பதாக கருதியதாலேயே ஓபிஎஸ் தேனியை தவிர்த்து ராமநாதபுரத்தில் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபம் அல்ல என்கின்றனர் ராமநாதபுரத்தில் விவரம் அறிந்த அரசியல் புள்ளிகள். காரணம் அதிமுக ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை ஓ.பன்னீர்செல்வம் ஜெயிக்க கூடாது என்பதுதான் அதிமுக தலைமையின் அறிவுறுத்தலாக இருந்திருக்கிறது.
வாக்குகள் பிரிப்பு: இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை டார்கெட் செய்வதையே அதிமுகவினர் முழுநேர வேலையாகக் கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் நவாஸ் கனி தேர்தலில் முன்னணி இடத்தில் இருக்கிறார். ஒருவேளை ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெற்றாலும் அது அதிர்ஷ்டத்தாலும் அவர் முகத்துக்காக இருக்குமே தவிர பாஜக வாக்கு வங்கியாலோ அல்லது சமுதாய வாக்குகளாலோ இருக்காது என்கின்றனர். ராமநாதபுரத்தில் சமுதாய வாக்குகள் எப்போதுமே வெற்றியை தீர்மானிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் இது இந்த முறை அதிக அளவில் பிரிந்து இருக்கிறது என்கின்றனர். சிறுபான்மை என வாக்குகளும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளும் நவாஸ் கனிக்கே செல்லும் என்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்கு வங்கியை ராமநாதபுரத்தில் கொண்டிருப்பதால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் நெருக்கடி இருக்கும் என்கின்றனர் ராமநாதபுரம் பகுதிவாசிகள்.












Click it and Unblock the Notifications