தனுஷ்கோடி அரிச்சல்முனை கோதண்டராமர்.. விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்த தலம்.. அயோத்தி ராமருடன் தொடர்பு
ராமநாதபுரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை கோதண்டராமர் சுவாமி ஆலயம் ராமாயண காவியத்துடன் தொடர்புடையது. பிரதமர் மோடி இன்றைய தினம் தரிசனம் செய்யும் இந்த ஆலயத்திற்கு அப்படி என்ன சிறப்பு என்று பார்க்கலாம். வரலாற்று தொடர்புடையதும், ஆன்மீகத் தொடர்பு கொண்டதுமான புண்ணிய பூமியாக விளங்கி வருகிறது ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாத சுவாமி திருக்கோவில், அக்னி தீர்த்தம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை, ஜடாயு தீர்த்தம், வில்லுண்டி தீர்த்தம் என பல புகழ் பெற்ற பல இடங்கள் ராமாயண காவியத்துடன் தொடர்புடையது.

ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் அழகிய கடற்கரைகளும், சிறு சிறு தீவுகளும் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை உள்ளது. வில்லைப் போன்று வளைந்த கடற்கரையை கொண்டிருப்பதால் இதனை தனுஷ்கோடி என்று அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பரந்த கடற்கரையில் தனுஷ்கோடி கடற்கரை மிகவும் அழகான ஒன்று. வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அரிச்சல் முனை அழகிய கடற்கரையானது ஒருபுறம் மன்னார் வளைகுடா, மறுபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்டு இருக்கிறது.
ராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையில் உள்ள தனுஷ்கோடியில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் ஒரு நகரமே முற்றிலும் அழிந்து போனது.தனுஷ்கோடியில் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அனைத்தும் அழிந்து போனது. இந்தக் கோவில் ராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம்.
தனுஷ்கோடி செல்லும் வழியில் இரு புறமும் நீர்சூழ கோதண்டராமர் கோவில் ரம்மியமாக அமைந்துள்ளது. புராணக்கதையை உள்ளடக்கிய இந்த கோவில், ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது. விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
இலங்கை மன்னர் ராவணனை போரில் வென்று, அவரது தம்பி விபீஷணருக்கு இலங்கை மன்னராக பட்டாபிஷேகம் செய்த தலமாக இக்கோவில் திகழ்கிறது. இதுபற்றிய பல ஓவியங்கள் அங்கே வரையப்பட்டுள்ளன. ராமனின் அருள் பெற்றதால் தான் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும் கொடுத்து, "விபீஷணாழ்வார்" என்று இராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது.
கோதண்டராமர் கோயிலில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். மூலஸ்தானத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். அளவில் சிறியதான இந்தக்கோயிலில், கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும் மட்டும் உள்ளனர்.
ராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோயில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாக விளங்குகிறது. கடல் நீர் சூழப்பட்டு நடுவில் கோவில் அமைந்து இருப்பதால் இந்த இடம் ஒரு குட்டி தீவு போல காட்சி அளிக்கிறது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்று இன்றைய தினம் கோதண்டராமரை தரிசனம் செய்து விட்டு இன்று டெல்லி சென்று அயோத்திக்கு செல்கிறார்.
அயோத்தியில் நாளைய தினம் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி நகரம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications