முடிவுக்கு வந்த கஃபாலா முறை.. இனி இந்தியர்களுக்கு பிரச்சனையே இருக்காது! சவுதி அரேபியா அதிரடி முடிவு
ரியாத்: சவுதியில் பல காலமாக அமலில் இருந்த கஃபாலா முறை நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 70 ஆண்டுகளாகப் பல லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திய சர்ச்சைக்குரிய இந்த முறை இப்போது நீக்கப்பட்டுள்ளது.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா. எண்ணெய் வளம் மிக்க சவுதியில் பல லட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே அங்குக் கடந்த 70 ஆண்டுகளாக அமலில் இருந்த சர்ச்சைக்குரிய கஃபாலா முறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தத்தால் சுமார் 1.3 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா உட்பட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பின்னணி
சவுதியில் எண்ணெய் கண்டறியப்பட்டு, அதை எடுக்கும் பணிகள் ஆரம்பித்த காலகட்டத்தில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டினர் அதிகளவில் சவுதிக்கு சென்றனர். அப்போது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகையை ஒழுங்குபடுத்த 1950-களில் 'கஃபாலா' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
'கஃபாலா' என்ற அரபுச் சொல்லுக்கு 'ஸ்பான்சர்ஷிப்' என்று பொருள். இந்த முறையின் கீழ், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒரு உள்ளூர் ஸ்பான்சருடன் (கஃபீல்) இணைக்கப்பட்டனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடியுரிமை, வேலைவாய்ப்பு மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து ஆகியவை குறித்து இந்த ஸ்பான்சரே முடிவு செய்வார்.
கஃபாலா
முதலில் கஃபாலா முறை சரியாகவே இருந்தது. இருப்பினும், காலப்போக்கில் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு கஃபாலா முறை வழிவகுத்தது. தொழிலாளர்களின் பாஸ்போர்ட்களை பறித்து வைத்தல், ஊதியத்தைத் தராமல் ஏமாற்றுவது எனப் பல்வேறு அத்துமீறும் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஸ்பான்சரின் அனுமதியின்றி வேலை மாறவோ, வெளிநாடு செல்லவோ முடியாது. அவ்வளவு ஏன் அதிகாரிகளை அணுகக் கூட முடியாத நிலையில் இருந்தனர். இது அவர்களைச் சுரண்டலுக்கு ஆளாக்கியது. இந்த கஃபாலா முறையை 'நவீனக் கால அடிமைத்தனம்' என்று கண்டித்த அந்த மனித உரிமை அமைப்புகள், அதை நீக்க வேண்டும் என நீண்ட காலமாகவே வலியுறுத்தின.
அதிகரித்த அழுத்தம்
இது தொழிலாளர்களின் அடிப்படை சுதந்திரங்களையும் பாதுகாப்புகளையும் பறித்தன. குறிப்பாக, வீடுகளுக்குப் பணி பெண்களாக செல்வோர் தனிமையில் வாழ்வது, அதிக வேலை வாங்குவது, ஊதியம் மறுக்கப்படுவது உள்ளிட்ட துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டனர். இதைச் சுட்டிக்காட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த முறையை நீக்கக் கோரிக்கை விடுத்தன. ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் வற்புறுத்தி வேலை வாங்குவதையும், மனிதக் கடத்தலையும் வளைகுடா நாடுகள் அனுமதிப்பதாக அவை குற்றம் சாட்டின.
சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 42% பேர், அதாவது 1.34 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். கட்டுமானத்துறை, விவசாயம் மற்றும் வீட்டு வேலைகள் போன்ற துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகும்.
கஃபாலா முறை நீக்கம்
இந்தச் சூழலில் தான் கஃபாலா முறை இப்போது நீக்கப்பட்டுள்ளது. இது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். கஃபாலா பதிலாகப் புதிய ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்படும். இதன் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் வேலை மாற முழு சுதந்திரம் பெறுவார்கள்.
மேலும், ஸ்பான்சரின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், தொழிலாளர்கள் நீதிமன்றங்கள் மற்றும் போலீசாரையும் அணுக முடியும். இதன் மூலம் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பல சிக்கல்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications