ஏமாற்றிய பருவமழை.. 13 ஆண்டுகளுக்குப் பின் அக்டோபரில் 32 அடியாக சரிந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்
சேலம்: தென்மேற்கு பருவமழை கை கொடுக்காத நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் 32 அடியாக சரிவடைந்துள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம்.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து விட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் நீர் திறப்பு விநாடிக்கு 4000ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 33 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 32அடியாக சரிந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததால் நேற்று 4000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
அணையில் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 4000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1104 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றில் 2703 கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 701 கனஅடியும் தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க மறுக்கிறது. கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளில் தண்ணீரின் இருப்பு அதிகமாகவே உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். பருவமழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications